வியாழன், 11 ஏப்ரல், 2019

“மணிமுத்தாற்றின் மாண்புகள்” முனைவர் வே.சண்முகம்


 “மணிமுத்தாற்றின் மாண்புகள்
                                                                                                         முனைவர் வே.சண்முகம்
                                                                                                                                   உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
                                                                                                                                                திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி,
                                                                                          விருத்தாசலம்.
 அறிமுகம்
உலகில் உள்ள மக்கள் யாவரினும் பண்டைக்காலம் தொட்டு உயரிய நாகரிகத்துடன் வாழ்ந்த பெருமைக்கு உரியவர்கள் என்னும் சிறப்பு தமிழர்களுக்கே உரியது. ʻஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பதை உணர்ந்து, இயற்கையை வளப்படுத்தும் நோக்குடன் ஆற்றங்கரையை ஒட்டிய நாகரிகத்தை தமிழர்கள்,வளர்த்தனர். இயற்கை வளங்களை ஒட்டி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இருக்கும் தலங்களை முத்தித் தலங்கள் என்று சிறப்பித்தனர். அவ்வகையில், பழமலை, விருத்தாசலம் ஆகிய திருப்பெயர்களைக் கொண்ட திருமுதுகுன்றத் தலம்  மணிமுத்தாறு என்னும் புண்ணிய நதியால் மாண்புற்ற நகரம்  ஆகும். தேவர்கள், முனிவர்கள், உள்ளிட்ட உயிர்கள் யாவற்றையும் மேன்மையுறச் செய்யும் தன்மை கொண்ட மணிமுத்தாற்றின் பெருமைகளை விளக்கும் முகத்தான்,
1.        இலக்கியங்களில் மணிமுத்தாறு
2.        குருடன் கண் பெற்றமை
3.        விபசித்து இறைபணிக்கு ஆட்படல்
4.        குபேரன் தங்கை இறை பணிக்கு வித்திடல்
5.        அறுவர் வினை நீங்குதல்
6.        உயிர்களுக்கு அபயம் அளித்தல்
எனும் தலைப்புகளை ஒட்டி “மணிமுத்தாற்றின் மாண்புகள்” எனும் இந்த ஆய்வுக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.

இலக்கியங்களில் மணிமுத்தாறு

                இலக்கியங்கள் யாவும் மனித சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய சிறப்புக்குரியவை எடுத்துக் கூறுவனவாக இருப்பதால், தேவாரம் உள்ளிட்ட இலக்கியங்கள் வழிநின்று அருளாளர்கள் பலரும் மணிமுத்தாறின் மாண்புகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவ்வகையில்,
மத்தாவரை நிறுவிக்கடல்
                கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச்
                சுடர்வண்ணன திடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில்
                ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு
                முதுகுன்றடை வோமே.” 1 

என்னும் பாடல் வழியாகத் திருஞானசம்பந்தரும்,

முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
                எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே.”2 
என்னும் படல் வழியாகச் சுந்தரரும், அம்பிகையின் வடிவாக இருந்துப் பேரருள் சுரக்கும் மணிமுத்தாற்றின் மாண்புகளைச் சுட்டிச்செல்லும் தன்மையைக் காணமுடிகின்றது.
பிறவிக் குருடன் கண் பெற்றமை
        இலக்கியங்கள் சமுதாயத்தின் காலக்கண்ணாடியாக இருத்தலால் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்த குறிப்புகளையும் ஆங்காங்கே பதிவு செய்வதைக் காணமுடிகின்றது. அவ்வகையில் மணிமுத்தாற்றின் பெருமைகளைக் கூற முனைந்த சான்றோர்கள் பிறவிக் குருடன் கண் பெற்ற நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளனர்.
பிறவிக் குருடன் ஒருவன் முன்னே வெகு தூரத்திலிருந்து கோல் பிடித்து வந்தான். அவன் மணிமுத்தா நதி தீரத்தில் நிலைபெற்று அழகு பொருந்திய பெரியநாயகியாருடைய சன்னதிக்கு வடபுறத்தில் உள்ள புண்ணிய மடுவில் நீராடினான்.
                அதில் நீராடினால் என்ன பயன் பெறலாம் என்பது தெரியாமலேயே அவன் மணிமுத்தாற்றின் நீரில் மூழ்கிக் எழுந்தான். நீரில் மூழ்கி எழுந்த உடனே பிறவிக் குருடனுடைய கண்கள் நன்றாகத் தெரிந்தன. குவளை மலர் போல் பிரகாசித்தன.  இச்செய்தியை,
                                               ”ஆகவேன்று நானலற  வவர்தாம் பிடித்து வளைத்தென்னைப்
                                                 போகாதே என்றிரு விழியில் பொருந்து மருந்துதனை இட்டார்
                                                         சோகார் குருட்டு விழிதெரிந்து சிந்தைதானுந் தெளிதலினா
                                                   லோகாதி என்ற வழகை யானும் பார்த்தேனென்  சொல்கேன்”3
எனக் கூறும் விருத்தாசல புராணத்தின் பாடல்  வாயிலாக, மணிமுத்தாற்றின் மாண்புகள் புலப்படுத்தப்பட்டுள்ளன.
விபசித்து இறைபணிக்கு ஆட்பட்டமை
பிங்கல தேசத்தைச் சார்ந்த மணிபிங்கலை என்னும் பட்டினத்தை உடையவனும் , மேன்மை பொருந்திய குணங்களை உடையவனுமாகிய  விபசித்து என்பவர், முன்னை வினையின் காரணமாகத் தன்னுடைய குறைவிலாத செல்வத்தையும், உயர்வுற்ற தாயையும் இழந்தான். தரித்திரம் அவரைத் துரத்தியது. ஆற்றுப்படுத்துவோர் ஒருவரும் இல்லாமையால் நாடோறும் ஊர் ஊராகத் திரிந்தான்.
 தன் துன்பங்கள் தீராத காரணத்தால் அலைந்து திரிந்து கொண்டிருந்த நிலையில் அவர் செய்த முன்வினையின் பயனாக விபசித்துக்கு எதிரே ஒரு தெய்வீக விமானம் வந்தது. அத்தெய்வ விமானத்தை நெருங்கிய விபசித்து தன் நிலையைக் கூறி விண்ணப்பம் செய்தார். அப்போது,
வாசனையுள்ள கொன்றைமாலையை அணிந்த சடையையும்,
இடப வகனத்தையும் உடைய பரமசிவனின் கணநாதன் யான்,
பழமலையை மிதித்தவர்கள் புஅவைவரும் பெரும் நன்மையடைவார்கள். முன்
சென்மத்தில் நீ பழமலையை மிதித்த புண்ணியத்தை உடையவன்.
ஆதலால் நீயும் அத்தலத்திற்கு நன்மையொடு போவாயாகில்
உன்னையும் பழமலைநாதர்  இரட்சித்து அருள்வார் “4
என்னும் அருள் வாக்கு விபசித்துக்கு கிடைத்தது. விபசித்து கணநாதனின் ஆணையின் படி பழம்பதியாகிய பழமலையை அடைந்தார்  என்னும் செய்தியை விருத்தாசல புராணம்  தெளிவுபடுத்துகின்றது.
குபேரன் தங்கை இறை பணிக்கு வித்திடல்
                பழமலைநாதரின் சித்தத்தின் படி விபசித்து, தேவாதி தேவர்கள் வந்து வழிபடும் பெருமைக்குரிய பழமலையின் கண் உள்ள வன்னி மரத்தடியில் அமர்ந்து இறைவன் நாமத்தைத் துதித்துத் தியானத்தில் ஆழந்தார். அவ்வளவில் வான் வழியே வந்த தெய்வீக விமானம் ஒன்றிலிருந்து மணிமுத்தாற்றில் பண்ணிய நீராடும் விருப்பத்துடன் குபேரனின் தங்கை வந்திருந்தாள். நங்கை நீராடச் செல்கையில் சகல தேவர்களும் சேர்ந்து தன் அண்ணன் குபேரனுக்குப் பரிசாகக் கொடுத்த மூக்காபரணத்தைக் கழற்றி அருகில்  வைத்திருந்தாள்.
அப்போது அங்கு வந்த சிச்சிலிப் பறவை ஒன்று அந்த மூக்காபரணத்தைத் தான் உண்ணும் உணவென்று நினைத்து அலகால் கொத்தித் தூக்கிச்சென்று விட்டது.
  நீராடல் முடித்து வந்த குபேரனின் தங்கை  தன்னுடைய ஆபரணங்களை எடுத்துத் தரிக்கும் போது மூக்காபரணம் ஒன்று காணாமல் போனதை அறிந்தாள். தன் அண்ணன் குபேரனால் தனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட அந்த மூக்காபரணம் விலைமதிக்க இயலாதது அதனை இழந்து விட்டோமே என்று வருத்தப்பட்டு, என் மூக்காபரணத்தைக் கொண்டு வந்து கொடுப்பவர்க்கு என்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் சிவாக்கினைக்குப் பயன்படும் வகையில்  கொடுப்பேன் என்று அறிவித்தாள்.
மூக்காபரணத்தை எடுத்துச் சென்ற சிச்சிலிப் பறவை விபசித்து அமர்ந்திருந்த வன்னி மரத்தின் மீதமர்ந்து தான் உண்ணும் உணவென எண்ணித் தன் அலகால் அந்த ஆபரணத்தைக் கொத்தியது. தவறிய அந்த மூக்காபரணம்  விபசித்துவின் மடியில் விழுந்தது. இந்நிலையில் குபேரனின் தங்கையின் அறிவிப்பைப் கேட்ட விபசித்து, அந்த மூக்காபரணத்தைக் காட்டித் தங்களின் துயருக்குக் காரணம் இதுவோ என்றார். அகம் மகிழ்ந்த குபேரன் தங்கை என் வருத்ததைப் போக்கிய நீரே எனக்குத் தமையனாகுவீர் என்று சொல்லித் தன் ஆபரணங்கள் அனைத்தையும் விபசித்துவின் கையில் கொடுத்து, இவற்றை நகது கர்த்தாவாகிய ஈசனின் திருப்பணிக்குச் செலவிடுங்கள் என்று கூறிவிட்டு தேவலோகம் வழிபற்றிச்சென்றாள் என்று விருத்தால புராணம் மணிமுத்தாறு மற்றும் திருமுதுகுன்றத்தலத்தின் மாண்புகளை உணர்த்துகின்றது.5
இவற்றான் திருமுதுகுன்றத்தலம் தேவாதி தேவர்கள் விரும்பி உறையும் தலமாகவும், யாவரும் விரும்பி நீராடும் புண்ணிய நதியாக மணிமுத்தாறும் திகழ்ந்துள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடிகின்றது. அத்துடன்  முன்வினையின் காரணமாகச் சகல செல்வங்களையும் இழந்து பரம தரித்திரனாகத் திரிந்த விபசித்து திருமுதுகுன்றத்தலத்தை நண்ணியதன் காரணமாக இறைபணி செய்யும் வாய்ப்பினைப் பெற்று இறைநிலைக்கு  உயர்ந்துள்ளார் என்ற சிறப்பும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
  அறுவர் வினை நீங்குதல் 
  நடுநாட்டில் உள்ள திருத்தலங்களுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த பெருமைக்குரிய தலம் திருமுதுகுன்றம் எனும்  பெருமைக்குரிய விருத்தாசலம் ஆகும்.  இத்தலம் உயிர்களைப் பற்றும் வினைகளைப் போக்கும் சிறப்பு வாய்ந்த தலம் ஆகும். அன்னை  வடிவாக இருந்து அழகு செய்யும் மணிமுத்தாறு பாயும் திருமுதுகுன்றத்தலத்தை அகத்தியர்  வழிபட வந்தபோது அறுவினையாளர்கள் அவரைச் சந்தித்து தங்களின் வினையைப் போக்கியருளுமாறு வேண்டினார்கள்.இதனை ஸ்ரீ சொக்கலிங்க சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள்,
                                                       முத்தமணி நதிமூழ்கிப் பெற்றனனோர் குருடன்விழி
                                                           மூடும் வினையாளர் நின்போல்
                                                         மூவிரண் டறுவர்கொடு வினை நீங்கி நற்கதி”6                                      
என்னும் திருமுதுகுன்றம் பெரியநாயகியம்மைப் பிள்ளைத்தமிழ்ப் பாடல் அடிகளின் வாயிலாக, விபசித்து உள்ளிட்ட  முன் வினையாளர்கள் முத்தமணி நதி மூழ்கியதன் காரணமாக மாண்புற்ற செய்திகளைக் குறிப்பிடுவதனைக்  காணமுடிகின்றது.
ஒருசமயம் அகத்தியரை நாடி வந்த அறுவினையாளர்கள்,
பிணியானின்று தவிக்கின்றோம் பெரிய கும்பக் குறுமுனியே
பணையாவடி யோம்முன்னென்ன பாவஞ்செய்தோனப்பகர்ந்தார்
நானில்லாப் பாவமுன்செய்து நரகிநெடுங்காலங் நெடுங்காலம்
                                             கிடந்து தீ தணியாளராக..”
என்று  வேண்டினர். அவ்வளவில் அகத்தியர், அவர்களின் அறுவினைகளைப் போக்கும் வகையில்  அறுவினையாளர்களை நோக்கி,
                                 1.பிராமணனைக் கொன்ற பாவத்தினால் –துன்பம் பொருந்திய கயரோகமும்,
 2.கோல் சொன்ன படியினால் – சொத்தைப் பற்களையும்,
                                 3.குரு பத்தினியைத் தீண்டியமையால் - யாவரும் அஞ்சத்தக்க தொழுநோயையும்,
                                 4. பரதாரத்தை இச்சித்த படியால் - நாற்றம் பொருந்திய சாரீரத்தையும்,
                                 5. மதுபானஞ் செய்தமையினால் -  அழுகிய குறைந்த கைகளையும்
                                 6.பொன்னைக் களவு செய்தபடியினால் - முயலகன் என்னும் வியாதியையும்
 உங்களுக்கு உண்டாகியது” என்றுரைத்து, இப்பாவங்களைப் போக்க வேண்டுமாயின்,

”மாசிமாத நான் முப்பான் மணிமுத்தாற்றின் மூழ்கி
                   ஈசன் முதுகுன்றெம்மானை யிறைஞ்சிற் பிணிகளிறு மென்றா
னாசினவரு மணிமுத்தாற்றி லையாறளவு நீராடி
பசமறுக் குஞ்சிவன் பாதம் பணிந்து”
 வழிபடவேண்டும் என்று அகத்தியர்  வழிகாட்டியதாக விருத்தாசல புராணம் எடுத்துக்கூறுவதைக் காண முடிகிறது. இவற்றான் விருத்தாசலம் எனும் தலம் சகல வினை நீக்கும் தலம் எனும் சிறப்பு பெறுவதுடன், நதிகளும் நாவரச்சியுடன் உள்ள நிலையில், மாசிமாத நீராடல் மகிழ்வைத் தரும் என்பதால் மாசிமாதம் முப்பது நாளும் மணிமுத்தாற்றில் நீராடல் நடந்துள்ளது எனும் குறிப்பும் காணக்கிடைக்கின்றது.
உயிர்களுக்கு அபயம் அளித்தல்
பழம் பெருமை மிக்க இந்தத் தலத்தில் விதியின் பயனாக உயிர்விடும் உயிர்களை இறைவி பெரியநாயகி தம்முடைய மடியில் கிடத்தி, அந்த ஆன்மா  பிறப்பறுக்கப்பட்ட வகையில் முந்தானையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் பழமலைநாதரோ அந்த உயிரின் காதில் ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசத்தும் அந்த உயிர்களைத் தம்முடைய உருவமாக ஈடேற்றம் பெறுமாறு ஆக்கும் தலமாக மணிமுத்தாறு பாயும் திருமுதுகுன்றத் தலம்  சிறப்புடன் விளங்குகின்றது. இதனை,
கூடும் உயிர்யாவைக்கும் அருளால் வலச்செவிக்
                கொள ஐந்தெழுத்து உரைத்துக்
கோதிலரி அயன் மாமலர்குலவிடும் பொன்னகர்க்
                குடியேற்றி வைப்பது மலால்
வீடுஉதவுங் கருணை முதுகிரிப் பெண்ணரசி” 7
எனும் திருமுதுகுன்றம் பெரியநாயகியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடல் வரிகல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. இச்செய்திகளை அடியொற்றி,,
         "தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்         
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
                                      காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
8 
எனும் கந்தபுராணப் பாடலின் வழி நின்று காணும்போது,
மணிமுத்தா நதியில் நீராடிப் பழமலைநாதரை வழிபட்டால், கங்கையில் நீராடி, காசி விசுவநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. இத்தகைய சிரப்பு கருதியே காசியை விட வீசம் பெரியது எனும் சிறப்புக்குரிய தலமாகப் போற்றப்படுகின்றது.எனவே இத் தலம்   'விருத்தகாசி' எனப்படுகிறது.
தொகுப்புரை
Ø  திருமுதுகுன்றத்தலம் தேவாதி தேவர்கள் விரும்பி உறையும் தலமாகவும், யாவரும் விரும்பி நீராடும் புண்ணிய நதியாக மணிமுத்தாறும் திகழ்ந்துள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடிகின்றது.
Ø  முன்வினையின் காரணமாகச் சகல செல்வங்களையும் இழந்து பரம தரித்திரனாகத் திரிந்த விபசித்து திருமுதுகுன்றத்தலத்தை நண்ணியதன் காரணமாக இறைபணி செய்யும் வாய்ப்பினைப் பெற்று இறைநிலைக்கு  உயர்ந்துள்ளார் என்ற சிறப்பும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
Ø  விருத்தாசலம் எனும் மாண்புக்குரிய தலம் சகல வினை நீக்கும் தலமாக விளங்கியதுடன், மாசிமாத நீராடல் மகிழ்வைத் தரும் என்பதால் மாசிமாதம் முப்பது நாளும் மணிமுத்தாற்றில் நீராடல் நடந்துள்ளது எனும் குறிப்பும் காணக்கிடைக்கின்றது
Ø  இத்தலத்தில் விதியின் பயனாக உயிர்விடும் உயிர்களை இறைவி பெரியநாயகி தம்முடைய மடியில் கிடத்தி, அந்த ஆன்மா  பிறப்பறுக்கப்பட்ட வகையில் முந்தானையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் பழமலைநாதரோ அந்த உயிரின் காதில் ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசத்தும் புரிந்தருளி அந்த உயிர்களைத் தம்முடைய உருவமாக ஈடேற்றம் செய்வார்  என்பது புலனாகின்றது.
Ø  மணிமுத்தா நதியில் நீராடிப் பழமலைநாதரை வழிபட்டால், கங்கையில் நீராடி, காசி விசுவநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது

                   அடிக்குறிப்புகள்:
1.        முதல் திருமுறை, பா. 1.012
2.     ஏழாம் திருமுறை, பா. 07.043.11
3.     விருத்தாசல புராணம், ப. 4
4.     விருத்தாசல புராணம், ப.73
5.     விருத்தாசல புராணம், ப. 67
6.     திருமுதுகுன்றம் பெரியநாயகியம்மை பிள்ளைத்தமிழ், பா.66
7.     திருமுதுகுன்றம் பெரியநாயகியம்மை பிள்ளைத்தமிழ், பா.85
8.         கந்தபுராணம் - வழிநடைப்படலம்                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக