“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”
முனைவர் வே. சண்முகம்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(நிலை 1),
விருத்தாசலம் - 606 001.
அறிமுகம்
உலகில் உள்ள மக்களிடையே நாகரிகம் வளர்ந்த நிலையில் பல்வேறு இனக் குழுக்கள் தோன்றின. அவ்வகையில் தோன்றி,கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் உள்ளோர் அனைவராலும் போற்றப்பட்ட உயரிய பண்பாட்டுக்கு உரியவர்கள் தமிழர்கள் எனில் அஃது மிகையன்று. உலக மக்கள் பலரும் இன்றளவிலும் உயரிய பண்பாட்டை எய்தாதுவீணே இருக்கும் நிலையில், பன்னெடுங்காலத்திற்கும் முன்பே உயரிய பண்பாட்டுக் கூறுகளைத் தன்னகத்தே கொண்ட பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள.; அவர்தம் அகம், புறம்சார்ந்த வாழ்வியல் நெறிகளில் உயிரினும் மேலான ஒழுக்கத்தைப்போற்றினர்.இவ்வகையில் தமிழர்களின் வாழ்வியல் அறங்களுள் ஒன்றாக மதித்துப் போற்றப்பட்ட“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”. என்னும் உயரிய நெறியை, ஆளுமை மிகுந்த பெண்பாத்திரங்களின் வழிநின்று விளக்கும் முகத்தான் இந்த ஆய்வுக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது
முந்நீர்
முந்நீர் என்னும் சொல்லுக்கு ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்றையும் குறிக்கும் பொருள் உண்டு. எனினும,; கடல் என்னும் பொருளிலேயே முன்னோர்களால் இச்சொல்லாட்சி கையாளப்பட்டு வந்துள்ளது.இவ்வகையில்
“முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”1
என்று தொல்காப்பியரும,;
“முழங்குமுந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்”;2
என்று புறநானூறும் முந்நீர் எனும் சொல்லைக் கடல் என்னும் பொருண்மையிலேயே குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது.
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
பழந்தமிழ் மக்கள் யாவரும்அகம், புறம் ஆகிய இரண்டு நிலைகளிலும் அறம் சார்ந்த வாழ்வையலையே உயிரினும் மேலானதாகக் கொண்டு ஒழுகினர். அவர்களுள் ஆண்மகன் பொருளீட்டுவதையே தலையான கடமையாகக் கொண்டவன.; பெண்ணானவள், கணவன் அதாவது தலைவன் ஈட்டி வந்த செல்வத்தை தன் குடும்பத்தின் வருவாய்க்குத் தக்க வகையில் பயன்படுத்தி இன்பத்தையும் அறத்தையும் மேம்படுத்திக் குடியோம்பல் செய்வாள்.இதனை,
“வினையே ஆடவர்க்கு உயிரே
வாணுதல் மனையுறை மகளிர்க்கு
ஆடவர் உயிர்”3
எனும் குறுந்தொகையின் பாடலடி தெளிவுபடுத்துகின்றது.
இவ்வகையிலான கற்பு சார்ந்த,பண்பட்ட வாழ்வியல் நிலையில் தலைவன் மேற்கொள்ளும் ஆறு வகையானப் பிரிவுகளில் தலைவன் எந்த வகையான பிரிவாயினும்,காலினும் கலத்தினும்சென்றாலும்; தலைவியின்; பாதுகாப்பு உள்ளிட்ட நலன்களைக்கருதி அவளை இல்லில் இருத்தித் தான் மட்டுமே பிரிவை மேற்கொள்வான். இங்குக் காலினும் என்பதற்கு நடந்தும், பறந்தும், காற்றுவெளி சார்ந்த வழியென்றும் கொள்ள இடமுள்ளது. ஆதலான் மண்ணுலகத்தவர், விண்ணுலகத்தவர் என்றப் பாகுபாடின்றித் தலைவன் எத்தகு தன்மையராக இருந்தாலும்;,முந்நீராகிய நீர் வழி (சீதை, புனிதவதி), நிலவழி (தமயந்தி),ஆகயம் சார்ந்த வழியாகிய எவ்வழியாயினும் (காயசண்டிகை),தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை.
தலைமக்கள் கடன்
பண்டைய காலம் தொட்டு மூதாதையர் வழி வந்த செல்வத்தை நுகர்தல் என்பது தலை மக்களுக்கு உரிய ஒழுக்கம் அன்று. அவரவர் வருவாய் வழி நின்று, இல்லறமாகிய நல்லறத்தை மேற்கொள்ளவேண்டும். மூதாதையர் சேர்த்து வைத்த செல்வத்திற்கு இளைய தலைமுறையினர் பாதுகாப்பாளர் தாமேதவிர,செலவு செய்வதற்கு உரியவர் அல்லர். அவ்வாறு இன்றி உயர்ந்தோர் வைத்த செல்வங்களை அதாவது சந்ததிக்கு உரிய செல்வங்களைத்தானே உண்பார்களாயின், அவர்கள் உயிரோடு இருப்பினும் இருந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.இதனை,
“ர உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்”4
என்ற குறுந்தொகைப் பாடலடி தெரிவிக்கின்றது.
வினையே ஆடவர்க்கு உயிர் ஆதலால்,ஆற்று நீர், ஊற்று நீர், கடல்நீர் ஆகிய மூவகையான நீர் வழியின் கண்ணும், தலைவியைக்காலினும்,கலத்தினும்; அழைத்துச் செல்வது என்பது கூடாது. இந்நிலையில் தலைவியை உடன் கொண்டு பெயரும் சூழல் ஏற்படின், அன்பின் மேலீட்டால் உரிய காரணத்தைக் கூறிப்பிரிவினைத் தவிர்த்தல் மிக நன்று. தலைவன் வினைமேல் செல்லும்போது தலைவி எவ்வகையிலும் இடையீடு செய்வதை விடுத்து,
“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”5
எனும் தொல்காப்பிய விதிப்படி, உயிரினும் மேலான கற்புநெறியைப் போற்றி ஒழுக வேண்டும். மாறாக, பெண்டிர் எக்காரணம் கொண்டும் பிரிவில் உடன் செல்வது நன்மைக்கு உரியதன்று என்பதற்குக் கண்ணகி,சீதை,காரைக்கால் அம்மையார்,தமயந்தி, காயசண்டிகை உள்ளிட்ட ஆளுமை மிகுந்த பெண்பாத்திரங்கள் சான்றுகளாக உள்ளன.
முந்நீர் வழக்கில் கண்ணகி
சோழ நாட்டு மன்னனுக்கு இணையான செல்வச் செழிப்புடைய குலத்தில் பிறந்த கோவலன் மற்றும் கண்ணகியின் இல்லற வாழ்வின் தொடக்கம் உலகத்துள்ளோர் யாவரும் வியக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்தது. எனினும் கலை ஆர்வலன் கோவலன் மாதவியின் மீது கொண்ட கொள்கையால் மலை போன்று இருந்த நிதிக்குவியல்களை இழந்தான்.கண்ணகி, கணவனின் கருத்தறிந்து நடந்தாளே தவிர, கோவலனை மாதவியின் மனையின்பால் செல்லாமல் தடுத்து நிறுத்தி நன்னெறிப்;படுத்தும் தன்மை இல்லாதவளானாள்.
கோவலன் மாதவியோடு மனம் மாறுபட்டு மீளவும் தன்னிடம் வந்த போதும் கண்ணகி, காவல்தானே பாவையர்க்கு அழகு எனும் நிலையில் நல்ல குலமகளாக இருந்து கொழுநனைப் பேணினாள்.செல்வங்களை இழந்த நிலையில்,முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்பதை அறிந்த நிலையிலும் எழுகென எழுந்த கண்ணகி கோவலனோடு பாண்டியநாடு புகுந்தாள்.உடன்கொண்டு பெயரும் இத்தகைய செலவு துன்பத்தைத் தரும் என்பதை உணர்த்த முயன்ற இளங்கோ, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி கண்ணீரை மறைத்துப் பூவாடை அதுபோர்த்தி ஓடினாள் என்று கூறியதும், பாண்டியனின் மதில் மீதிருந்த கொடி வாரல் என்பன போல மறித்துக் கைகாட்டியதுஎன்று கூறியதும்இத்தகைய பிரிவு தவறென்பதைச் சுட்டிக்காட்டுவனவாகவே உள்ளன.
பண்டைய விதிகளை மீறிப் பொருளீட்டுதல் வேண்டி, வையையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குச் சென்ற கண்ணகியின் வாழ்வு சொல்லொணாத் துயரத்தை அடைந்ததனை நோக்கும்போது பண்டைய விதியாகிய முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை எனும் விதி மதிக்கத்தக்கதாக உள்ளது
முந்நீர் வழக்கில்சீதை
மிதிலை மாநகரில் சனக மகாராசனின் மகளாகப் பிறந்தவள் சீதையாவார். திருமகளின் வடிவம் பொருந்திய சீதாப்பிராட்டிக்கு வைதேகி, மைதிலி, சிறையிருந்த செல்வி என்னும் வேறு பெயர்களும் உண்டு. கார்முகில் பூத்து வரிவில் ஏந்தி வந்ததைப் போன்று வந்து உதித்த கார்மேகவண்ணன், ராமன் வில்லை ஒடித்து நங்கையருள் நல்லாளாகிய சீதையை மணந்தான். இல்லறம் நல்லறமாகத் திகழ்ந்தது.அன்னை கைகேயி விடுத்த ஏவலால் இராமன் காடேக வேண்டியதாயிற்று. அன்பின் மிகுதியால் தலைவனைப் பிரிய இயலாத சீதை,“பிரிதலைக் காட்டிலும் உயிர் செல்லுதல் நலம்”6எனும் உயரிய நோக்குடன்,
“பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக”7
எனும் குறுந்தொகைப் பாடலின் தலைவியைப் போல,“அரிதே காதலர்ப் பிரிதல்”8என்பதை உணர்ந்து இராமபிரானுடன் கானகம் சென்றாள்.முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை என்னும் பண்டைய நெறியை மறந்து, அன்பின் மேலீட்டால் பிரிவில் உடன்பட்ட நிலையில் தலைமக்கள் இருவரும் மிகுந்த துன்பத்தை அடைந்தனர். தலைமக்கள் அடைந்த துன்பத்தை,
“தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்”9
எனும் இளங்காவடிகளின் பாடல் அடிகள் தெளிவுபடுத்தக் காணலாம்.
முந்நீர் வழக்கில் மகடூஉ தனித்துப் பயணித்தல்
காரைவனம் என்னும் சிற்றூரில் தனதத்தன் என்பான் மகளாகப் பிறந்தவர் புனிதவதியார் ஆவார். இளமைத்துடிப்பும், மயில் அன்ன சாயலும் கொண்ட புனிதவதி அவர்தம் செல்வம் நிலைக்குத்தகுந்த குடியில் பிறந்த பரமதத்தனை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார். நல்லறிவும், நற்குணங்களையும் ஒருங்கே கொண்டிருந்;த புனிதவதியார், அடியார் ஒருவர் தன் இல்லத்திற்கு வந்திருந்த நிலையில் அடியார்க்கு அமுது தயாராக இல்லாத காரணத்தால்;; மாங்கனிகளில் ஒன்றைக் கொண்டுவந்தது அமுது படைத்து அகம் மகிழ்ந்தார்.;
மாங்கனிகளின் வாயிலாகப் புனிதவதியாரின் தெய்வத்தன்மையை உணர்ந்த பரமதத்தன் தன் இல்லில்;; இருந்து வாழாது, வணிக நோக்கத்தைக் காரணம் காட்டிப் புனிதவதியைத் தவிர்த்துச் சென்றான். உறவினர்கள் வழி பரமதத்தன் அழகிய மதுரை மாநகராகிய பழைய பதியில் வாழ்கிறான் என்பதை அறிந்து கணவனை நாடிச் சென்றார் புனிதவதி. புகாரிலிருந்து கணவனை இழந்த பொருளை மீட்க வையையைத் தாண்டிப் பயணித்த கண்ணகியைப் போல, புனிதவதிகணவனை மீட்க வேண்டி புகாரிலிருந்து வையையைக் கடந்து மதுரையை நோக்கிப் பயணித்தார். இப்பயணத்திற்கு முன்னர் கணவர் பரமதத்தன் இருக்கின்றான் என்ற நிலை இருந்தது. புனிதவதியும் முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்ற பண்டைய விதியைக் கடந்த நிலையில் பரமதத்தனைக் கண்டாள்;. ஆயினும் கணவனைத் தனக்கு உரியவனாகக் கொண்டாளில்லை. அவனோடு இன்புற்று வாழும் நிலை அவளுக்கு வாய்க்கவில்லை
பண்டைய தமிழர் மரபு என்பது பெண்கள் இல்லில் இருந்து ஒம்புவதே அல்லால் மற்றில்லை. கணவனுடன் வந்த கண்ணகியின் வாழ்வில் கடுந்துயர் விளைந்ததைப் போல, இல்லில் இருந்து விருந்து ஓம்பவும் கணவன் வேண்டுமே என்று கணவனைத் தேடி வையை ஆற்றைக் கடந்து வந்த புனிதவதி கணவனைக் கண்டும், கணவன் மீண்டும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பெண்ணை விட பேய் உருவம் மேல் என்று வேண்டிப் பெற்ற நிகழ்வின் துணையுடன்முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லைஎன்பதன் உட்பொருளை இலக்கியங்கள் வழியாகப் பொருத்திக் காணமுடிகின்றது
முந்நீர் வழக்கில்; வித்யாதரர்கள்
காயசண்டிகை
காயசண்டிகை என்பாள் ஒரு வித்யாதரப் பெண். அவள் தன் கணவன் மருதவேகன் எனும் காஞ்சனனுடன் இந்திரவிழாவைக் காண வேண்டிப் புகார் நகருக்கு வந்திருந்தாள். விழா நிகழ்வுகளில் தன்னை மறந்த நிலையில் காயசண்டிகை,விருச்சிக முனிவர் உண்பதற்கு வைத்திருந்த நாவல் கனியை அறியாமல் மிதித்துச் சிதைத்துவிட்டாள். அந்த நாவல் கனி வியக்கத்தக்க தன்மையது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்க்கும் தன்மையது. அத்தகைய அற்புதம் வாய்ந்த நாவல் கனி சிதைக்கப்பட்டதைக் கண்டு வெகுண்டு எழுந்த முனிவர், பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இருந்த நான் அக்கனியை உண்ண இருந்த நிலையில் நீ அந்தக்கனியைச் சிதைத்து விட்டாய். ஆதலால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் என் தவம் முடிந்து பசியானது தீரும் வரையில,; நீயும் தீராப் பசி நோயால் வருந்துவாயாக என்று கடுமொழி விடுத்தார்.
விழா நிகழ்வுகளைக் காண வந்த இடத்தில்காயசண்டிகை சாபம் பெற்ற நிலையில், அவளின் கணவன் மருதவேகன் இச்சாபம் தீரும் வரையில் நீ புறநகரில் இருப்பாயாக,பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து நான் வருகின்றேன் என்று கூறி விட்டு; மேலுலகம் சென்றான். காயசண்டிகை முனிவரின் சாபத்தால் 12 ஆண்டுகள் யானைப்பசி என்னும் தீராத பசி நோயினால் வருந்தவேண்டியதாயிற்று.
முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை என்பது கண்ணகி, சீதை, தமயந்தி உள்ளிட்ட மானுடர்களுக்கு வகுக்கப்பட்ட அக இலக்கணமாயினும், விண்ணுலகில் இருந்துப் புகார் நகரம் வந்த மருதவேகனுக்கும் அவன் மனைவி காயசண்டிகைக்கும் பொருந்தியே அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகின்றது.
தொகுப்புரை:
Ø பழந்தமிழ் மக்கள் யாவரும்அகம், புறம் ஆகிய இரண்டு நிலைகளிலும் அறம் சார்ந்த வாழ்வியலையே உயிரினும் மேலானதாகக் கொண்டு ஒழுகினர். அவர்களுள் ஆண்மகன் பொருளீட்டுவதையே தலைவன் கடமையாகக் கொண்டவன.; பெண்ணானவள், கணவன் அதாவது தலைவன் ஈட்டி வந்த செல்வத்தைத் தன் குடும்பத்தின் வருவாய்க்குத் தக்க வகையில் பயன்படுத்தி இன்பத்தையும் அறத்தையும் மேம்படுத்திக் குடியோம்பல் செய்வாள் என்பதனை இலக்கியங்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.
Ø பண்டைய தமிழர் மரபு என்பது பெண்கள் இல்லில் இருந்து ஒம்புவதே அல்லால் மற்று வாழ்வு இல்லை என்பதனைக் கண்ணகி, சீதை, தமயந்தி உள்ளிட்டக் கதாப்பாத்திரங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Ø பண்டைய விதிகளை மீறிப் பொருளீட்டுதல் வேண்டிக் காலினும், கலத்தினும் வையையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குச் சென்ற கண்ணகியின் வாழ்வு சொல்லொனாத் துயரத்தை அடைந்ததனை நோக்கும்போது பண்டைய விதியாகிய முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை எனும் விதி மதிக்கத்தக்கதாக உள்ளது
Ø கணவனைத் தேடி வையை ஆற்றைக் கடந்து வந்த புனிதவதி கணவனைக் கண்டும், கணவன் மீண்டும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், பெண்ணை விடப் பேய் உருவம் மேல் என்று வேண்டிப் பெற்ற நிகழ்வின் துணையுடன் முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை என்பதன் உட்பொருளை இலக்கியங்கள் வழியாகப் பொருத்திக் காணமுடிகின்றது
Ø முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை என்பது கண்ணகி, சீதை, தமயந்தி உள்ளிட்ட மானுடர்களுக்கு வகுக்கப்பட்ட அக இலக்கணமாயினும், விண்ணுலகில் இருந்து மண்ணுலகம் வந்தவர்களுக்கும் பொருந்தியே அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகின்றது.
Ø வினையே ஆடவர்க்கு உயிர் ஆதலால்,ஆற்று நீர், ஊற்று நீர், கடல்நீர் ஆகிய மூவகையான நீர் வழியின் கண்ணும், தலைவியைக்காலினும்,கலத்தினும்; அழைத்துச் செல்வது என்பது கூடாது. இந்நிலையில் தலைவியை உடன் கொண்டு பெயரும் சூழல் ஏற்படின், அன்பின் மேலீட்டால் உரிய காரணத்தைக் கூறிப்பிரிவினைத் தவிர்த்தல் மிக நன்று என்பது ஆளுமை மிகுந்த கதாப்பாத்திரங்களின் வாயிலாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சான்றெண் விளக்கம்
1. தொல்காப்பியம்,நூ.980
2. புறநானூறு, பா. 18.1
3. குறுந்தொகை, பா. 135
4. குறுந்தொகை, பா.283
5. தொல்காப்பியம், நூ.1098
6. குறுந்தொகை, பா. 32:6
7. குறுந்தொகை, பா. 57
8. நற்றிணை, பா.5:7
9. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, அடிகள்.46-49
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக