ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

விநாயகர் வழிபாட்டில் அறிவியல் செய்திகள்


விநாயகர் வழிபாட்டில் அறிவியல் செய்திகள்
                                   முனைவர் வே.சண்முகம்
                                           உதவிப்பேராசிரியர்
                                           தமிழ்த்துறைp>
                                           திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி
                                           விருத்தாசலம் -606 001-- 9843175303
அறிமுகம்
       உலக மொழிகள் பலவற்றுக்கும் தலைமையான தன்மை கொண்ட தமிழ்மொழி கால எல்லைகளைக் கடந்த அனாதி மொழியாகவும், கடல் கடந்த பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் விளங்கும் சிறப்புகளைக் கொண்டது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மொழிக்கு பக்திமொழி எனும் சிறப்பும் உண்டு. தமிழகத்தில் வளர்ந்த பக்தி நெறிகள் யாகும் அறிவு சார்ந்த நிலையில் இறைநிலையுடன் தொடர்பு படுத்தப் பட்டுள்ளன.

மக்களிடையே வழக்கில் உள்ள  புராண, இதிகாசங்கள் சார்ந்த செய்திகள் யாவும் மதத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் மனிதத்தை, மனிதனின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் வழிபாட்டுடன் தொடர்புடைய அறிவு சார்ந்த பக்தி நெறி தமிழகத்தில் மட்டுமல்லாது கடல் கடந்த எல்லைகள் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டு வளர்ந்தது. இவ்வகையில் இறை நம்பிக்கையுடன் நேரடியான தொடர்பு கொண்ட விநாயகர் வழிபாட்டில்  காணலாகும் அறிவியல் சார்ந்த செய்திகளை வெளிக்கொணரும் முகத்தான் இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது
 விநாயகர் பிறப்பு
 சைவ சமயத்தில் சிவபெருமான் முழுமுதற் கடவுளாயினும், விநாயகர் ஆதி பரம்பொருள் ஆவார். கணபதி என்னும் திருநாமத்தைக் கொண்டவரும் விநாயகரே ஆவார்  
      ஒருமுறை அண்ட சராசரங்களையும் கட்டிக்காக்கும் உமையவள் நீராடச் செல்கையில், தன்னுடைய பாதுகாப்பிற்காகத் தன் உடலிலிருந்து ஒரு பிடி சந்தனத்தைத் தேய்த்து எடுத்துப் பிடித்து வைத்துப் பிள்ளையாராக்கி, அதற்கு உயிரையும் கொடுத்துக் காவல் வைத்தார். அன்னையின் ஏவலை அடுத்து விநாயகர் காவலுக்கு நின்ற நிலையில், சர்வேஸ்வரன் சிவபெருமான் அம்பிகை நீராடும் பகுதிக்குச் சென்றார். காவலுக்கு நின்ற விநாயகர் சர்வேஸ்வரன் சிவபெருமானை மேலும் செல்ல விடாமல் தடுத்தார். சினம் கொண்ட சிவபெருமான் தன் உடைவாளை எடுத்து விநாயகரின் தலையைத் துண்டித்தார். நீராடல் முடிந்து மீண்டு வந்த உமையவள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பாலகன் விநாயகர் கிடப்பதைக் கண்டு சிவபெருமானிடம் உயிர் கொடுக்க வேண்டினார். சிவபெருமான் வேறு ஒரு தலையை விநாயகன் உடலில் பொருத்தி அதற்கு உயிர் கொடுத்தார் என்பது இறை நெறி சார்ந்த நம்பிக்கை.
 அறிவியலும் ஆன்மீகமும்
      இன்றைய அறிவியல் உலகில், ஒரு செல்லில் அதாவது ஒரு மரபணுவிலிருந்து கூட ஒரு உயிரையும் உடலையும் உருவாக்கும் வல்லமை பொருந்திய நமக்கு உருமாறுதல், கூடுவிட்டுக் கூடுபாய்தல், வியர்வையில் இருந்து உயிர் தோன்றுதல், நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றுதல், ஓர் உடலில் இருந்து மற்றோர் உடலில் ஒரு பாகத்தை மாற்றி வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் யாவும் நம்பத் தகுந்தவையாகவே உள்ளன. இவற்றான் அறிவியல் துறையிலான முன்னேற்றங்கள் பலவற்றிற்கும் ஆன்மீகம் சார்ந்த செய்திகள் அடித்தளமாகவே இருந்து வந்துள்ளன என்பது தெளிவு.
 தோற்றப் பொலிவு
      உலக உயிர்கள் அனைத்திற்கும் அடிப்படையான தன்மையுடன் அமையப் பெற்றது விநாயகர் வடிவமாகும். பல்வேறு உயிர்களை, உயிர்த் தொகுதிகளை தன்னகத்தே அடக்கி கொண்டு, யானையின் தலை, தேவ உடல், பூதத்தின் கை கால்கள் எனுமாறு பல்லுயிர்த் தொகுதியாலான உடலமைப்பை விநாயகரிடம் காணமுடிகின்றது.

ஒரு சிலர் விநாயகர் முகத்தில் உள்ள தந்தங்களை வைத்து, உமையொரு பாகனைப் போல விநாயகனும் ஆணும் பெண்ணுமாக இருக்கிறார் என்றும் கூறுவர். ஆயினும் புராணச் செய்திகளின் படி அஃது உண்மையன்று என்பதனை, விநாயகர் மகாபாரதம் எழுதிய கதையை ஒட்டி அறிந்துகொள்ள முடிகின்றது. அத்துடன்,

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் 
         நால்வாய் ஐங்கரத்தன் ஆறு 
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன்
 
         தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் 
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
 
         இரவு பகல் உணர்வோர் சிந்தைத் 
திருகோட்டு அயன் திருமால் செல்வமும்
 
         ஒன்றோ என்னச் செய்யும் தேவே

எனும் அருணந்திசிவத்தின் வாக்கும் விநாயர் வடிவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

விநாயகரை வழிபாடு செய்ய இந்த வடிவம் தான் முக்கியம் என்பதனை நமது புராணங்கள் வரையறை செய்யவில்லை. அவரவர் வசதி, வாய்ப்புகளுக்குக்கு ஏற்ப மண், மஞ்சள், வெள்ளெருக்கு, மரம், தங்கம், வெள்ளி, சாணம் எனுமாறு பல்வேறு பொருள்களில், பல்வேறு வடிவங்களில் விநாயகரைச் செய்து வழிபாடு செய்கின்றனர். இத்தகைய எளிமையான  வழிபாட்டில் பயன்படும் பொருள்கள் பலவும் பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது
 ஐந்தி  ஆறு அடக்கம்
      உலகில் உள்ள உயிர்கள் யாவும் ஓரறிவு முதல் ஆறறிவு சார்ந்த உயிர் வகைகளுள் அடக்கம். இவ்வகையில் உலக உயிர்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு பல்லுயிர்த் தொகுதியின் மூலமாக விளங்கும். பெருமைக்குரியவர் விநாயகர். உயிர்களின் இலக்கணத்தின் அடிப்படையில் யானை ஐந்தறிவு கொண்டது,  யானைத் தலையைக் கொண்டு வந்து சேர்த்து வைத்து பல்லுயிர்க் கணங்களின் தொகுதியாக உறுவாக்கப்பட்ட விநாயகர் ஆனைமுகத்தான் ஆயினும் ஆறறிவு கொண்டவன்  என்று விநாயக புராணம் கூறுகின்றது.
              எண்சாண் உடலுக்குச் சிரசே பிரதானம் என்னும் பண்டைய நெறியின் அடிப்படையில் விநாயகனின் உடல் யானையைத் தலையைச் சார்ந்துள்ளது. விநாயகன் ஆனைமுகத்தான் ஆயினும், அன்னையும் பிதாவும் அகில உலகமும் ஆவார்கள் என்றவன். ஆதலான் அறிவின் பயன்பாட்டின் அடிப்படையில் ஆனைமுகத்தான் ஆறறிவினன் ஆனான்
 உடலமைப்பைக் கொண்டு, உருவத்தைக் கண்டு ஒருவரை எள்ளி நகையாடக் கூடாது எனும் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக விநாயகன் ஐந்தினுள் அடக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பு

அமைவிடம் சார்ந்த அறிவியல்

மனித நாகரிகம் ஆற்றங்கரையை ஒட்டி நாகரிகத்தால் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதுடன் மனிதர்களின் வாழ்வியல் நெறிகளும் இயற்கையுடன் நேரடியாக தொடர்பு கொண்டே அமைந்துள்ளது. இத்தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே மூலப் பரம்பொருள் விநாயகனின் இருப்பிடமும் ஆற்றங்கரையை ஒட்டியோ அல்லது தெருக்கள் கூடும் சந்திப்பிலோ,  வேப்ப மரமும் அரச மரமும் இணைந்திருக்கும் இடத்திலோ அமைவதாயிற்று
      அதிகாலையில் துயில் எழுதல், ஆற்றுநீரில் அதாவது குளிர்ந்த நீரில் குளித்தல் உள்ளிட்ட செயல்கள் யாவும் உடல் சூட்டைத் தணிக்கும் என்பதாலும், இறைவன் மீதான வழிபாட்டில் கவனம் செலுத்தும்போது மனம் அமைதி பெறுவதோடு காமம், குரோதம் ஆகிய பன்புகள் மறைந்து இறையன்பு பிறக்கும் என்பது வெளிப்பாடு. வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து இருக்கும் இடத்தில் உள்ள இறைவனை அதிகாலை வேளையில் சுற்றி வந்து வணங்கும் போது நல்ல காற்று மக்களுக்குக் கிடைக்கின்றது. அத்துடன் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையில் இருக்கும் குறைபாடுகளையும் சரி செய்யும் இயல்புடையது. இத்தகைய சிறப்பினை வெளிப்படுத்தும் நோக்கில், அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தடவிப் பார்த்தாளாம் எனும் வழக்கும் மக்களிடையே இருந்து வருவதைக் காணமுடிகின்றது. இவற்றான், விநாயகர் வழிபாடு என்பது இறை வழிபாடு என்ற நிலையில் உடலையும், மனதையும் வலுப்படுத்தும் பயிற்சிக் களமாகத் திகழும் நிலையைக் காணமுடிகின்றது

வழிபாட்டு முறைகளில் அறிவியல்
 களிமண் விநாயகர்
      காலம் தோறும் விநாயகர் வடிவம் களி மண்ணால் செய்யப்படுவது வழக்கம். திருவிழா நிகழ்வுகள் முடிந்தவுடன் கடவுள் வடிவிலான களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட விநாயகரை நீர்நிலைகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவது மக்களின் வழக்கம். இந்தப் பூவுலகில் கடவுளுக்கே இத்தகைய நிலையா? என்று எண்ணக்கூடாது. உலகியல் வாழ்வில் யாருக்கும், எதுவும் நிலையில்லை எனும் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இத்தகைய வழிபாட்டுமுறை மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உலகப் படைப்புகள் யாவும் ஒரு மூலத்திலிருந்து உருவானவையே. ஒன்றிலிருந்து மற்றொன்று தோற்றம் பெற்றுள்ளது. ஒரு பொருள் எந்த மூலத்திலிருந்து தோற்றம் பெற்றதோ முடிவில் அப்பொருள் அங்கேயே சென்று ஒடுங்கும் என்ற இயற்கையின் நியதியை அகிலத்தில் வாழ்வோர்க்கெல்லாம் உணர்த்தும் வகையில் களிமண் விநாயகர் வழிபாடு மக்களிடையே இன்றளவும் வழக்கில் இருந்து வருகின்றது.
 அருகம்புல்  வழிபாடு
 சிறு புல் தானே என்று அருகம் புல்லை அற்பமாக எண்ணி மிதித்துச் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற வாக்கினுக்கு வலிமை தரும் வகையில் இறைவன் அருகம் புல்லைத் தனக்குரியதாக மதித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், அருகம் புல் தனது உலக உயிர்களின் உடல் சூட்டைத் தணிப்பதுடன் காமம், குரோதம் உள்ளிட்ட இழிந்த பண்புகளையும் போக்கும் வல்லமை உடையது ஆதலால் பரம்பொருளாகிய விநாயகருக்கு அருகம்புல் உகந்தது ஆயிற்று.

  எருக்கம் பூ வழிபாடு
      எருக்கம் மலர் ஒரு வகையான காட்டுப் பூ வகையைச் சார்ந்தது. மனமில்லாத மலர், கசப்புத் தன்மையுடையது என்பன போன்ற பொதுமையான தன்மையால் மனிதர்கள் எருக்கம் மலரை விரும்புவது இல்லை. எருக்கம் மலரின் மருத்துவம் சார்ந்த மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் முகத்தான் பரம்பொருள் விநாயகர் எருக்கம் மலரைத் தனக்குரிய விருப்பத்துக்குரிய மலராக வழிபாட்டுக்கு ஏற்றுக்கொண்டார்

  மோதகம் படைத்தல்
 எளிமையின் வடிவமாகத் திகழும் விநாயகப் பெருமானுக்கு என்று தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் இல்லை. நம்மிடம் என்ன பொருள் உள்ளதோ அதனை வைத்து வணங்கலாம். ஔவையார்,
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே
  நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
என்னும் பாடல் வழியாக விநாயகப் பெருமானுக்குப் பிடித்த உணவுப் பொருள்களாக, குறிஞ்சி நிலத்தில் கிடைத்த பால்,
 முல்லை நிலத்தில் கிடைத்த தேன்,
மருத நிலத்தில் கிடைத்த பாகு,
             நெய்தல் நிலத்தில் கிடைத்த பருப்பு (தேங்காய்)
      எனுமாறு தமிழகத்தின் நானிலத்திலும் விளைந்த பொருட்களைத் தந்து மகிழ்வதைக் காணலாம். இவையே அன்றி அவல், பொறி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு விநாயகருக்குப் படையல் இட்டு மக்கள் மகிழ்வெய்துவதுண்டு. எனினும் விநாயகருக்குப் பிடித்தமான உணவுப் பொருள் மோதகம் கொழுக்கட்டை ஆகும்.

        மோதகம் விநாயகர் வழிபாட்டில் வழிபடு பொருளாக இருப்பதற்குரிய காரணமும்  உண்டு. மோதகம் எனும் கொழுக்கட்டையின் மேற்புறம் மாவுப்பொருள் அதாவது புரோட்டின். இத்தகைய மாவுப்பொருள் உலக மாயையைக் குறிக்கும்: அதன் உள்ளே இருக்கும் வெல்லம் கலந்த பூரணம் உண்மையாகிய பரம் பொருளை உணர்த்தும் இத்தகைய உண்மையை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் மோதகம் படைத்தல் என்னும் வழிபாட்டு முறை விநாயகப் பெருமானுக்கு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய வழிபாட்டினை, மோதகம் படைத்து வழிபடும் முறையை முதன் முதலில் செய்தவர் வசிஷ்டரின் மனைவி அருந்ததி என்பரே ஆவார்.



 தோப்புக்கரணம் போடுதல்
 விநாயகப் பெருமானை வழிபடும் பக்தர்கள் பரம்பொருளான விநாயகரை மகிழ்விப்பதற்காகத் தோப்புக்கரணம் போடுகின்றனர். இத்தகைய வழிபாட்டு முறையில் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்த விகடசக்கர விநாயகர் எனும் புராணக்கதை மறைந்திருந்தாலும், தோப்புக்கரணம் போடும் பழக்கமானது உடலையும் மனதையும் வலுப்படுத்தும் உடற்பயிற்சியாக இருக்கின்றது. இன்றளவும் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு, தலையில் குட்டிக் கொள்ளுதல் ஆகிய பழக்கமும்  இருந்துவருவதைக் காணப்படுகின்றது.
இரண்டு காதுகளையும் கையால் பிடித்துக் கொண்டு, விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடும்போது; கைகளால் காதுகளை அழுத்திப் பிடிக்கும் நிலையில், காதின் வழியாக மூளைக்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்பெற்று இரத்த ஓட்டம் சரிசெய்யப்படுகின்றது. அதன் காரணமாக அறிவு வளர்ச்சி பெறுகிறது. ஒளவையார் அருளிய,
வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்    
         நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -
  பூக்கொண்டுதுப்பார்          
     திருமேனித் தும்பிக்கையான் பாதம்
     தப்பாமல் சார்வார் தமக்கு.
எனும் பாடல் வரிகள் விநாயகர் வழிபாட்டில் காணலாகும் அறிவியல் செய்திகளுக்குச் சான்றாக அமைந்துள்ள தன்மை புலனாகின்றது.  .
.
 முடிவுரை
      உலகில் உள்ள இறைநெறி சார்ந்த மார்க்கங்கள் பலவற்றுள்ளும் இந்து மதம் தலை சிறந்த அறிவு சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. அத்துடன் விநாயகப் பெருமானை வழிபட்டால் விதியையும் வென்று வாழலாம் என்ற நோக்குடன் விநாயகர் வழிபாடு இன்றளவும் வழக்கில் உள்ள தன்மையை அறிந்து கொள்ளமுடிகின்றது. 
விநாயகர் பிறப்பு, விநாயகர் வடிவம், விநாயகர்க்கு உரிய உணவு, விநாயகர்க்கு உரிய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட ஆன்மீகம் சார்ந்த செய்திகள் யாவும் அறிவியல் சார்ந்த உண்மைகளையும் புலப்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.
 மக்களிடையே வழக்கிலுள்ள புராணங்களும் இதிகாசங்களும் வெறும் வெற்றுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் சார்ந்த செய்திகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக