வெள்ளி, 15 மார்ச், 2024

உதயண குமார காவியம் உஞ்ஞை காண்டம்

 

உதயண குமார காவியம் 

உஞ்ஞை காண்டம்

உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றுசமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண குமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நூல் அமைப்பு

369 பாடல்களைக் கொண்ட இந்த நூல், உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை அறிந்து கொள்ள, உதயண குமார காவியம் நூல் உதவுகிறது. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.

சீவக சிந்தாமணி, கந்தபுராணம் போன்ற பெரு நூல்களுக்குச் சுருக்க நூல் இயற்றும் மரபு தமிழில் உண்டு. அந்த வகையில், பெருங்கதையின் சுருக்கமாக உருவான நூலே உதயணகுமார காவியம். விருத்தப்பாவில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்.

காப்பியத்தின் கதை

கௌசாம்பி நகரத்தின் மன்னன் சதானிகனுக்கும் மனைவி மிருகாபதிக்கும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர் . அவர்களில் முதலாமவன் உதயணன். இரண்டாவது மகன் பிங்கலன். மூன்றாவது மகன் கடகன்.

உதயணனின் மிக நெருங்கிய நண்பன் யூகி. இவன் சேதிநாட்டின் முனிவர்கள் தலைவரான பிரமசுந்தர முனிவரின் மகன். உதயணன் யூகி இருவரும் கலைகளில் சிறந்தர்களாய் இருந்தனர்.

பிரமசுந்தர முனிவர், யானையின் சினத்தை அடக்கி வசப்படுத்தும் மந்திரம் ஒன்றை உதயணனுக்குச் சொல்லிக் கொடுத்தார். உதயணனுக்கு இசைப்பயிற்சி அளித்து, இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசையால் யானைகளை வசப்படுத்த வல்லதுமான 'கோடபதிஎன்னும் யாழையும் பரிசாக அளித்தார். உதயணன் அந்த யாழின் உதவியால் தெய்வயானை ஒன்றை அடக்கி, அதனையே பரிசாகப் பெற்றான் . குபேரனின் இயக்கர்களில் ஒருவனான நஞ்சுகன் என்பவனின் நட்பையும் பெற்றான். தனது மாமனின் நகரமான வைசாலிநகரை உதயணன் ஆட்சி செய்தான். யூகி அவனுக்கு அமைச்சனாக விளங்கினான்.

உதயணனின் தந்தை துறவு பூண்டதால் கௌசாம்பி நாட்டின் ஆட்சியை ஏற்று நடத்தும் பொறுப்பும் உதயணனுக்கு வந்தது. அதனால், தனது நண்பனான யூகியிடம் வைசாலி நகர அரசை ஒப்படைத்தான். இருவரும் தங்கள் தங்கள் நாட்டைச் சிறப்பாக அரசாண்டனர்.

இந்நிலையில் உஞ்ஞைநகர் அரசன் பிரச்சோதனனால் உதயணன் சிறைப்பிடிக்கப்பட்டான். இதனை அறிந்த யூகி தந்திரங்கள் சில செய்து உதயணனைச் சிறை மீட்டான். யூகியின் உதவியால், உதயணன், பிரச்சோதனனின் மகள் வாசவதத்தையைத் திருமணம் செய்து கொண்டான். தொடர்ந்து பதுமாபதி, மானனீகை, விரிசிகை ஆகிய மூன்று பெண்களையும் மணந்துகொண்டான். வாழ்வாங்கு வாழ்ந்த உதயணன், இறுதியில் தன் மகன் நரவாகனனிடம் அரசை ஒப்படைத்து துறவு மேற்கொண்டான்.

 உதயண குமார காவியம்

     உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். (பிற நூல்கள் சூளாமணி, யசோதரகாவியம், நாக குமார காவியம், நீலகேசி). இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக் காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. இதில் நூல் முகப்பில் 'வணக்கம்' என்ற தலைப்பில் உள்ள இரு பாடல்களும், அவையடக்கப் பாடல் ஒன்றும், பயன் என்றதலைப்பில் உள்ள ஒரு பாடலும் அடங்கும். இதுவல்லாது காண்டங்களின் செய்யுள் தொகை என்ற தலைப்பில் இரண்டு விருத்தங்களும் இக் காவியத்தின் கடைசியில் அமைந்துள்ளன. ஆகவே மொத்த பாடல்களின் எண்ணிக்கை 369 ஆகும். இந் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

 

சீவக சிந்தாமணி, கந்தபுராணம் முதலான பேரிலக்கியங்களுக்குச் சுருக்கம் பாடுகிற மரபு காணப்படுகிறது. இவ்வகையில் கொங்குவேளிரின் பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர். 369 பாடல்களைக் கொண்டது. பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லைபெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இந்நூல் துணை செய்கிறது. ஏனைய சிறுகாப்பியங்களுக்கு இருந்த நோக்கம்நெறி இந்நூலுக்கு இல்லை. பெருங்கதைக்குச் சுருக்க நூலாக அமைவதன்றி வேறு சிறப்புகள் இந்நூலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காப்பிய வருணனைக் கூறுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. கதையை மட்டும் தெளிவாகக் கூறிச் செல்கிறது.

அழகிய மலரையுடைய அசோக நீழலின் கண், மணிகளும் பொன்னும் முத்தும் மிக்குள்ள மூன்று குடைகளும் நீழல் செய்து விளங்காநிற்ப எழுந்தருளியிருக்கின்ற நேமிநாதருடைய திருவடிகளை முற்படத் தொழுது வணங்கிப் பின்னர்க் கலைமகளுடைய திருவடிகளையும், சாதுக்களின் அடிகளையும் எம்முடைய இரண்டு கைகளையும் தலையின்மேல் கூப்பித் தொழுதற்குரிய இலக்கணப்படி தொழுவேமாக! என்பதாம்.

 

முக்குடைசந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பனபொன்னுநன் மணியுமுத்தும் புனைந்தமுக் குடைஎன (சூடா.) நிகண்டிலும் வருதல் காண்க. பண்ணவர் - சாதுக்கள். நேமீசர் - நேமிநாதர் என்னும் இருபத்திரண்டாந் தீர்த்தங்கரர். (1)

பொன்னாலியன்ற மதிலிடையே உயர்ந்துள்ள மலர் நிறைந்த அசோக நீழலின்கண்; காண்டற்கினிய அழகையுடைய சமவ சரணம் என்னும் திருக்கோயிலினூடே, அரிமான் சுமந்த இருக்கையின்மேல் வீற்றிருந்தருளாநின்ற அருகக் கடவுளின் திருவடிகளை வாயார வாழ்த்தி வணங்கி வழிபாடு செய்து உயரிய பெருமை மிகுந்தவனாகிய உதயண மன்னனுடைய வரலாற்றினை விரித்துக் கூறுவேம். கேண்மின்! என்பதாம், எயில்-மதில். ஆலயம், ஈண்டுச் சமவசரணம் என்னும் கோயில். (2)

மாணிக்கமுதலிய மணிகளையிட்டுப் பொதிந்துள்ள துணிதானும், அந்த மணிகளைத் தன்னுட் கொண்டிருந்த காலத்திலே மணிபொதிந்த அந்தத் துணியை இகழாமல் அந்த மணிகளோடே சேர்த்து நன்கு மதித்து வைப்பார் உலகத்தினர். அங்ஙனமே அறிஞர்கள் தம் ஆராய்ச்சியின்கண் எம்முடைய சொற்கள் குற்றமுடைய சொற்களாயவிடத்தும் அச்சொற்கள் தூய்மையுடைய நல்ல உறுதிப் பொருளைத் தம் மகத்துக் கொண்டவிடத்தே அணிகலன்களைப் போற்றுமாறு போற்றிக்கொள்ளாநிற்பர்; ஆதலாலே, யாமும் எம் சொற்களின் சிறுமை நோக்கி நெஞ்சத்தின்கண் வருந்துவேமல்லேம் என்பதாம்.

இந் நூலை அன்புற்று ஒதுபவர்க்கு அந்தப் புண்ணியம் அவருடைய பழைய தீவினை வருகின்ற வழியைப் பொருந்தி நின்று அவற்றை வாராமல் தடுத்து நிறுத்தும், அத்தீவினை தடையுறவே அவர்தம் நல்வினையெல்லாம் தடையின்று அவர்பாற் சேர்தலால் யாதொரு குறையுமுண்டாகாமல் செல்வங்கள் வந்து நிரம்பும். மாறுபாடுடையனவாய் அவருயிருடன் முன்னரே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைப் படிப்படியாகக் குறைக்கின்ற உதிர்ப்பைத் தோற்றுவிக்கும். பெருமைபொருந்திய அந்த உதிர்ப்பினது சிறப்பு யாம் கூறிக்காட்டும் எண்மைத்தன்று என்பதாம்.

 

அவையடக்கம்

இந்நூல் புண்ணிய நூலாகலின் இதனை ஓதுவார்க்கு இனிவரக்கடவ தீவினைகள் வாரா. வரக்கடவ நல்வினையெல்லாம் வந்து செல்வ முண்டாக்கும் என்றவாறு. மாறுறு முன்கருமம் என்றது முன்னரே உயிரைப் பிணித்துள்ள வினைகளை. இவற்றைச் சிறிது சிறிதாக நீக்கும் என்பார் வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் என்றார். உதிர்ப்பு என்னுந் தத்துவம் கைவரப் பெறுவோர் வீடுபெறுதல் ஒருதலை ஆகலின் அதன் பெருமை பேசலாகா தென்றார்.

இதன்கண் நற்காட்சி எய்துதற்குரிய ஏழு தத்துவங்களில் ஊறு செறிப்பு, உதிர்ப்பு என்னும் மூன்று தத்துவங்கள் கூறப்பட்டன.

ஏழு தத்துவங்கள்: உயி்ர், உயிரில்லது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு. கட்டு, வீடு என்பன. இவற்றில், ஊறு - மாறுறு கருமம் என்பதனானும், செறிப்பு - செறியப்பண்ணும் என்பதனானும், உதிர்ப்பு - உதிர்ப்பை ஆக்கும் என்பதனானும் பெற்றாம். ஊறாவது - வினைகள் உயிருடன் சேரவரும் வாயில். செறிப்பு - அவ்வினை வருவாயைத் தடுப்பது, உதிர்ப்பு - உயிருடன் முன்னமே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைச் சிறிது சிறிதாகத் தேய்ப்பது. இவ்வுதிர்ப்பே வீடு பேற்றிற்கு இன்றியமையாக் கருவியாகலின் இதன் தன்மை விளம்புதற்பாலதாமோ என்றார். (4)

 

நாட்டுச் சிறப்பு

 மூன்று மதில்களையுடைய நம் கோமானாகிய அழகிய வீரநாதர் என்னும் ?சீ வர்த்தமானர்குறிஞ்சி முதலிய வாகத் தொகுப்புற்ற இந்த நிலவுலகத்து மக்கட்கெல்லாம் பொலிவுடைய நல்லறமாகிய நல்ல சொன்மழையை மிகுதியாகப் பொழிந்து அவரையெல்லாம் உய்யக் கொண்டருளிய காலத்திலே வெள்ளிய திங்கள் மண்டிலம் போன்ற குடைநீழலிருந்து அம்மக்களை இனிது பாதுகாத்துவந்த குறைவற்ற மெய்க்காட்சியையுடைய (சதானிகன் என்னும்) அரசன் ஆட்சி செய்தருளிய நாட்டின் சிறப்பினை இனிக் கூறுவேம் கேண்மின் 

 

இஞ்சி மூன்று-மூன்று மதில். அவை உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம் என்பன. வீரநாதர் - சீவர்த்தமானர் என்னும் 24 ஆம் தீர்த்தங்கரர். புஞ்சம் - தொகுதி. (1)

நாவலந்தீவு

பூவும் நல்ல தளிர்களுஞ் செறிவுற்று எண்ணிறந்த பொழில்கள் சூழப்பெற்று விளங்குகின்றதொரு நாவல் என்னும் மரமுண்மையாலே அந்த மரத்தின் பெயரே தன் பெயராகக் கொண்டு விளக்கமெய்தி நிலைபெற்று நின்று மேலும், தீவுகளும் கடல்களும் ஒன்றற்கொன்று இவ்விரண்டு மடங்கு அளவுடையனவாகத் தன்னைச் சூழ்ந்துள்ள இந்த நாவலந்தீவு இந்தப் பேருலகமாகிய சங்கீன்ற நன்முத்துப் போன்று திகழ்வதாம் என்க. (2)

வத்தவநாடு

உவர்க்கடலுக் கப்பாலுள்ள சுவராகிய வில்லை வளைத்து வெள்ளிப் பெருமலையாகிய நாணை யேற்றி மிகுதியாக வளைத்து வைத்தாற்போன்ற தோற்றப் பொலிவினையுடைய இப்பரதகண்டத்தின்கண், தருமகண்டம் என்று கூறப்பட்ட பகுதியிலுள்ள நாடுகளில் வைத்து, வானுற வளர்ந்துள்ள பொழில்கள் நிலைத்து நின்று தம் மணத்தை நாற்றிசையினும் காற்றினாலே பரப்புதற் கிடனான அந்த நாடு வத்தவன் நாடு என்னும் பெயருடைய நன்னாடாகும் என்க. (7)

கோ நகரம்

அந்த நாட்டின் தலைநகரத்தைச் சூழ்ந்துள்ள மதில்கள் மிகவும் உயர்ந்து விளங்குவன வானவருலகத்தின் குறைவற்ற எல்லையைக் கண்டு அழகுற நிற்றலைக் கண்டு அவ்வானவர் நாடு அஞ்சுதலாலே அவ்வெல்லையிலேயே நின்று நீ ஈண்டு வருவாயாக! என்று தம்முச்சியிலே அழகுண்டாகத் திகழ்ந்து நீண்டு நிற்கின்ற தம் கொடிகளாகிய கையை அசைத்துக் கூப்பிடுவன போற் றோன்றின என்க.

இதனோடு, ?இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின், மஞ்சுசூழ்ந்து கொண்ட ணிந்து மாக நீண்ட நாகமும், அஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன், குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே? எனவரும் சிந்தாமணிச் செய்யுளை (143) ஒப்பு நோக்குக. அமரலோகம் அஞ்சலில் என்க. (4)

இதுவுமது

அந்நகரத்தின் முகில்கள் தவழாநின்ற வாயின் மாடத்தின்மீது முத்துக்களாலியன்ற அழகிய மாலைகள் தொங்க விடப்பட்டு, ஊடுதற்கிடனான படுக்கையின்மேல் அழகிய மகளிரும் மைந்தரும் பகல் இரவென்னும் வேற்றுமையின்றி எப்பொழுதும் காமவின்பத்தை அதற்குரிய நலங்களோடு நுகர்ந்திருப்பாராக; அந்நகரமானது ?கௌசாம்பிஎன்னும் இசைதிசை போய பெயரோடு பொருந்தித் திகழ்வதாயிற்று என்க. (5)

 

அரசன்

அவ்வத்தவ நாட்டிற்குப் பகைவருடைய ஊனைச் சுவைத்துக் கொப்பளித்து வெற்றியால் விளங்குகின்ற வேற்படை ஏந்தியவனும், முகிலானது வானத்திலே கருவுற்றெழுந்து மழை பொழியுமாறு போல இரவவலர்க்குப் பொருளை வழங்குகின்ற வள்ளன்மையுடைய கைகளை யுடையவனும் வண்டுக ளிசைபாடுதற் கிடனான தேன்துளிக்கும் மலர்மாலையை அணிந்த தோளையுடையவனும், செல்வச் சிறப்பினாலே குபேரனை ஒத்தவனும் அணிகலன்கள் வீசுகின்ற ஒளியையுடைய மார்பினையுடையவனும் ஆகிய சதானிகன் என்பவன் அரசனாவான் என்க. (6)

  

கோப்பெருந்தேவி

அச்சதானிக வேந்தன் நெஞ்சிலே உறையும் கோப்பெருங்தேவியோ, பெண்டிருள் சிறந்த மாணிக்கம் போல்பவளும் மயில் போன்ற சாயலையும் அன்னம் போன்ற நடையினையும் வேல் போன்ற கண்ணையும் உடையவளும், கற்பினால் அருந்ததியை ஒத்தவளும் ஆவள்; பொன் போன்ற தேமல் படர்ந்த புணர்தற்கினிய கொங்கையையுடைய அந்நங்கை மன்னனுக்கு அமிழ்தம் போல்பவளாம், மின்னல் போன்ற நுண்ணிய இடையையுடைய அவ்வரசி ?மிருகாபதிஎன்னும் பெயரோடு புகழால் மிக்கு விளங்குவாளாயினள் என்க. (7)

கற்புடைய திருமகளை யொத்த நங்கையாகிய அம்மிருகாபதி என்னும் அரசியினது வயிற்றின்கண் வாய்மையிலுயர்ந்த தேவன் ஒருவன் வந்துற்றுக் கருவாயுருவாகி நன்மையையுடைய ஒன்பது திங்களும் நன்கு வளர்ந்திருக்க, ஒருநாள் அவ்வரசி மேனிலை நிலாமுற்றத்தே பொலிவுடைய படுக்கைக் கட்டிலின்மேல் வீற்றிருந்தாளாக அப்பொழுது என்க. (8)

 

மிருகாபதியை ஒரு பறவை எடுத்துப் போதல்

நிறைகருவுடைய அக்கோப் பெருந்தேவி அனந்தரான் மயங்கி அழகிய அந்நிலா முற்றத்தே அப்படுக்கையிலேயே சிவந்த பட்டாடையாலே திருமேனி முழுதும் போர்த்துக் கொண்டு துயிலும் பொழுது அவளை அங்கே வானத்தே பறந்து செல்கின்ற அண்ட பேரண்டப்புள் என்னும் ஒரு பறவை கண்டு அழகிய ஊன் பிண்டம் என்று கருதி மெல்லெனக் கால்களாற் பற்றி எடுத்துக்கொண்டு அற்றை நாளிலேயே வான்வழியே பறந்து போயிற்று; என்க. (9)

அவ்வாறு எடுத்துச் சென்ற அந்தப் பறவை தானும் அம்மிருகாபதியின் தந்தையாகிய சேடகமன்னன் உலகினைத் துறந்து போய்ச் சிறந்த முனிவனாகி அவ்வொழுக்கத்தே நிற்கின்ற விபுலம் என்னும் நல்ல மலையைச் சூழ்ந்துள்ள அழகிய காட்டிற் சென்று அம்முனிவன் பக்கலிலே நிலத்திலே வைக்கும்பொழுது அத்தேவி இனிய துயில் கலைந்து விழித்தெழுந்தாள்; (ஊனைத் தின்பதன்றி) உயிரைக் கொன்று தின்னாத நல்லியல்புடைய அப்பறவை தானும் அவட்குயிருண்மை கண்டு வாளா வானத்தே பறந்தோடிப் போயிற்றென்க. (10)

 

அரசி கருவுயிர்த்தல்

நிறை வெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய அம்மிருகாபதி நிரம்பிய கருவுடையளாதலாலே, அக்கருப் பொறையாலே வருத்தம் மிகாநிற்பவும். ஒப்பற்ற வானத்து ஞாயிறு முதலிய கோள்களெல்லாம் முறைப்படி நன்னெறியை நோக்காநிற்பவும் வலிமை மிக்க ஆண்மகன் அந்நல்ல முழுத்தத்திலேயே பிறந்தானாக, அவ்வரசி தானும் ஒலிக்கின்ற அலையையுடைய கடலின்கண் வலம்புரிச் சங்கமொன்று ஆணி முத்தினை ஈன்றதனை ஒத்து விளங்கினள் என்க. (11)

ஒன்றனோடொன்று போரிடுகின்ற இரண்டு கயல்மீன்களை ஒத்த கண்களையுடைய அவ்வரசி, தான் பறவையாற் பற்றப் பட்டுக் காட்டினூடே வந்திருப்பதனை அறிந்து அந்நிலைமைக்குப் பெரிதும் துயருற்றுத் தன்பக்கத்தே அழகிய மாணிக்கம் ஒன்று கிடப்பது போலத் தன்னருமந்த மகன் கிடப்பதனையும் கண்டு தன் னெஞ்சிலே பெருகிய அன்பு காரணமாகத் தனக் கெய்தியுள்ள பெரிய துயரத்தையும் விடுத்து மகிழ்ந்திருப்ப, அவ்வழியே நீராடச் சென்ற அவளுடைய நல்ல தந்தையாகிய அச்சேடக முனிவன் அவளைக் கண்டு அவ்விடத்திற்குவந்து சேர்ந்தான் என்க. (12)

 

 

 

மகவிற்குப் பெயரிடல்

தவவொழுக்கத்தையுடைய தந்தையாகிய சேடக முனிவர் மிருகாபதியை மகவுடனே அழைத்துச் சென்று தாம் வதிகின்ற தவப்பள்ளியின்கண் சேர்த்தி அப்பள்ளியிடத்தேயே இனிதாகப் பாதுகாவாநிற்ப, ஆங்குறையும் துறவோர்கள்இவன் ஞாயிறு தோன்றும்பொழுது பிறந்தமையாலே இவன் பெயர் ‘உதயணன்’ என்று வழங்குவதாகஎன்று பெயரிட்டு வாழ்த்தினர். இவ்வண்ணமாக அந்தத் தாயும் பிள்ளையும் அத் துறவோர் பள்ளியின்கண் உறைவாராயினர் என்க. (13)

 

உதயணன் பெற்ற பேறுகள்

சேடக முனிவருடைய தவப்பள்ளியிலிருந்த உதயணன் பிரமசுந்தர முனிவருடைய மகனாகிய யூகி என்பானோடு நட்புக் கிழமை பூண்டு அவனும் தானுமாகிய இருவரும் இனிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்பமிக்க கலைகளாகிய கடலை நீந்திக் கரை கண்டிருக்கும் பொழுது உதயணன், காட்டின்கண் வாழ்கின்ற யானையும் பிறவுமாகிய விலங்குகளும் தன்னெதிர் வந்து கண்டு தன் அடிகளிலே வீழ்ந்து வணங்குதற்குக் காரணமான தெய்வத் தன்மையுடைய இசையினையுடையதும் தேவேந்திரனால் பிரமசுந்தர முனிவருக்குப் பரிசிலாக வழங்கப் பட்டதுமாகிய ‘கோடவதி’ என்னும் தெய்வயாழைப் பொறுமை மிக்க அப்பிரம சுந்தர முனிவர் அருளினாலே பரிசிலாகப் பெற்று மகிழ்ந்தான். (14)

 

உதயணன் தெய்வயானையைக் கோடவதியின் உதவியாற்
பெறுதல்

ஒருநாள் உதயணகுமரன் அக்காட்டின்கண் ஒரு மலையின் பக்கலிலே மற்றொரு மலை இயங்குமாறு போலே இயங்குகின்ற ஓர் அழகிய தேவயானையைக் கண்டு அதன்பாற் சென்று தனது கோடவதி என்னும் பேரியாழை இயக்கிப்பாட, அத்தெய்வயானை தானும் அத்தெய்வயாழினது இன்னிசை கேட்டு மெல்ல உதயணன் முன்பு வந்து முழங்காற்படியிட்டு வணங்கி எழுந்து நின்று தன் பிடரிலேறுதற்பொருட்டு உதயணனுக்குத் தனது கையினைப் படியாகக் கொடுப்ப அக்குறிப்புணர்ந்த உதயணனும் அத்தெய்வயானையின் மேலேறி ஊர்ந்து போய்த் தவப்பள்ளியை எய்தினன் என்க. (15)

 

தெய்வயானை உதயணன் கனவிற்றோன்றிக் கூறுதல்

அந்தத் தெய்வ யானையானது ஒருநாள் இரவின் கண் உதயணன் துயிலின்கண் கனவிலே தோன்றிச் சொன்னயந் தேர்ந்து அவன் இனிதாகக் கேட்கும்படிகோமகனே! நின்னை யன்றி யானைகட்குக் குறிப்பு மொழி பயிற்றும் யானைப் பாகன் என்பால் வந்து என்னைப்பற்றிக் கயிறிட்டுப் பிணித்தாலும், என் பிடரில் ஏறினாலும், இற்றைநாள் தொடங்கி எதிர்காலத்திலே நீ எப்பொழுதாவது நானுணவின்றியிருக்க நீ எனக்கு முன்பு உண்டாயாயினும், இக்குற்றங்கள் ஏதேனும் ஒன்று நிகழின் அந்த நாளிலேயே யான் நின்னைவிட் டகன்று போவேன் காண்!” என்று இவற்றை (அந்த யானை) கூறக் கேட்டனன். (16)

 

உதயணன் மாமனாகிய விக்கிரமன் அத்தவப் பள்ளிக்கு வருதல்

இவ்வாறு உதயணன் வாழ்க்கை இனிதாகச் செல்கின்ற காலத்திலே நிறைந்த தவத்தையுடைய சேடகமுனிவருடைய மகனாகிய வெல்லும் மறக்களிற்றி யானையையுடைய வேந்தன் விக்கிரமன் என்பவன் தனக்கு மகப்பேறில்லாமையாலே பெரிதும் நெஞ்சம் வருந்தியவன் மனம் ஆறுதல் பெறும்பொருட்டு இனிய மொழியையும் அருளையுமுடைய சேடகமுனிவருடைய தவப்பள்ளிக்கு வந்து அவருடைய அடிகளில் வணங்கி அவர் வாழ்த்தினையும் பெற்று அத்தவப் பள்ளியி்லே இன்புற்று நன்குறைந்தனன். (19)

விக்கிரமன் உதயணனையும் யூகியையும் கண்டு இவர்கள் யார்
என முனிவரை வினாதல்

இவ்வாற்றால் தவப்பள்ளியிலிருந்த விக்கிரம வேந்தன் அப்பள்ளியிலிருக்கின்ற உதயணகுமரனையும் யூகியையு நோக்கி வியப்புற்றுமுனிவர் பெருமானே! காண்டற்கினிய தோற்றமுடைய இச்சிறுவர்கள் யார்? என்று வினவ, பெருமையுடைய அம்முனிவனும் அவர்கள் வரலாற்றினை விக்கிரமனுக்கு அறிவித்தருளுதலாலே, உதயணன் தன் தங்கை மகனென்றறிந்தமையாலே பெரிதும் மகிழ்ந்து தந்தையாகிய சேடகமுனிவனைப் பின்னும் தொழுது, பெரியீர்! உதயணன் வரலாறு அறிந்தவுடன் என் நெஞ்சம் என்னுடைய தாயப் பொருள் முழுவதையும் அச்செல்வனுக்கே வழங்கி என்நாட்டிற்கு அரசனாக்கித் தலையிலணிகின்ற முடியுஞ் சூட்டி, என்நாட்டிற்குப் போகச் செய்துவிட்டு உன்னோடு பண்டே கலந்த தவவொழுக்கத்தையே மேற்கொள்ள விரும்புகின்றது என்று விண்ணப்பித்தான். (20)

 

உதயணன் அரசுரிமை பெறுதல்

மாமனாகிய விக்கிரம மன்னன் தன்னெண்ணத்தைச் சேடக முனிவன் பாற் கூறிப் பெரிதும் முயன்று உதயணனையும் மிருகாபதியையும் தன்னுடன் உய்க்கும்படி வேண்டிப் பெற்று மலையை ஒத்த அந்த வெவ்விய தெய்வயானையில் உதயணனையும் (சிவிகையில்) மிருகாபதியையும் ஏற்றிச் சென்று தன் மனத்திற்கு அதுகாறும் நிறைவுதந்த தனது நாட்டினை உதயணனாகிய அந்த மருமகனுக்கு வழங்கித் துறவியாகி முனிவர்களுறைகின்ற தொரு காட்டிற் புகுந்து தவமேற் கொண்டிருந்தனன் என்க. (19)

 

சதானிகன் மிருகாபதியைக் காண்டல்

மாமனுடன் சென்று கோமுடி கொண்ட உதயண வேந்தன் இளமைப் பருவங்கடந்து கட்டிளங்காளைப் பருவமடைந்து அந்நாட்டினை வள்ளன்மைப்பண்போடு செங்கோல் செலுத்தினானாக; இனி வத்தவ நாட்டின்கண் கௌசாம்பியில் சதானிகன் தன் கோப்பெருந்தேவியாகிய இளமயில் போலுஞ் சாயலையுடைய மிருகாபதியின் பிரிவிற்குப் பெரிதும் வருந்தியவனாய் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து கூறும் நெஞ்சு நிறைந்த கோட்பாடு மிக்கானொரு துறவியின்பாற் சென்று தன் வருத்தத்தைக் கூறினான் என்க. (20)

 

மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்

அந்தத் துறவி தனது ஓதி ஞானத்தாலுணர்ந்து கூறுதலாலே யானைப் போர், குதிரைப் போர் வல்லவனான அந்தச் சதானிகமன்னன் மிருகாபதி சேதிநாடு வந்துற்றதும் செல்வமிக்க உதயணனும் அவளொடு போந்தமையும் அறிந்து உளம் மகிழ்ந்து தன்கோநகரம் புக்கு மிருகாபதியின் வரவினை எதிர்பார்த்திருந்த காலத்திலே அம்முனிவன் கூறியநாளிலே அம்மிருகாபதியும் சேதி நாட்டினின்றும் வத்தவநாடு புக்குத் தன் காதலனாகிய சதானிகனோடு கூடியிருந்து மீண்டும் அறிவு முதலியவற்றாற் சிறந்த தேவ மக்கள் போன்ற இரண்டு ஆண்மக்களைத் தகுந்த செவ்வியி லீன்று மகிழ்ந்தாள் என்க. (21)

இவ்வாறு மீண்டும் மக்கட் பேறெய்திய அச் சதானிகமன்னன் அம்மக்கட்குப் பிங்கலன் என்றும் கடகன் என்றும் பெயர்சூட்டி அம்மனைவி மக்கள்பால் அழுந்திய காதலோடு அந்நாட்டினை இனிது ஆட்சிபுரிந்து வாழும் நாளிலே, ஆண்டுச் சேதிநாட்டின்கண் செங்கோலோச்சிய குங்குமமணிந்த மார்பினையுடைய உதயண வேந்தனும் யூகியும் போர் மேற்கொண்டு சென்று ஆங்குத் தம் நாட்டின் மருங்கேயுளவாகிய பிற நாடுகளை யெல்லாம் வென்று தம் மாட்சியின் கீழ்ப்படுத்து வெற்றிச் சிறப்போடு இனிதாக வாழ்ந்திருந்தனர் என்க. (22)

 

சதானிகன் துறவியாதல்

பின்னர்ச் சதானிக மன்னன் சேதிநாட்டிலிருந்த உதயணன்பாற் சென்று அவனை வத்தவ நாட்டிற்கு அழைத்துவந்து மைந்தனே! நீ ஆள்கின்ற அச் சேதி நாடே யல்லால் இவ்வத்தவ நாட்டு அரசுரிமையும் உன்னதே ஆகுக! என்று கூறி அந்த நாட்டினையும் உதயணனுக்கே வழங்கிக் காட்டகத்தே சென்று சின முதலிய தீக்குணங்களும் துன்பங்களும் ஒருசேர நீங்குதற்குக் காரணமான நற்காட்சியை யுடையவனாய்த் தவவொழுக்கந்தாங்கி இன்பமுறுதற் கிடனான யோக நிலையின்கண் அழகுற நிலைத்திருந்தான் என்க. (23)

 

உதயணனுடைய அமைச்சர்கள்

சதானிக மன்னனால் முடி சூட்டியபொழுது உதயணமன்னன் சேதி நாட்டினர்க்கேயன்றி வத்தவநாட்டு மக்களுக்கும் மன்னவனாகினன். அப்பொழுது அவனை அணிவகுத்தற்குரிய தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நான்குவகைப் படைகளும் சூழ்ந்தன. அமைச்சர் தாமும் நால்வராயினர். மற்று அந்த அமைச்சர்களுடைய பெயர்கள் குறைதலில்லாத புகழையுடைய யூகியும், அவனைச் சார்ந்த (இரண்டாம் அமைச்சன்) உருமண்ணுவாவும் அவர்க்கெல்லாம் துணையாகிய வயந்தகனும் பழைய புகழையுடைய இடபகனும் என்று கூறப்படுனவாம் என்க. (24)

 

உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்

மேலே கூறிய அமைச்சர் நால்வரும் உதயணவேந்தனுக்கு உயிரினுமினிய கேண்மையுடையராகிச் சிறந்த அமைச்சியலைத் திறம்பட நடத்துமாற்றால் உதயணகுமரன் தனக்கு வருகின்ற பகைமன்னர் பலரும் அழிந்து போம்படி போரின்கட் கொன்று தீர்த்து உயரிய செங்கோலை முட்டின்றிச் செலுத்துங் காலத்திலே, அம்மன்னவன் காண்டற்கரிய நாடகங்கள் பலவற்றையும் நாடொறும் கண்டு களிப்பவன் ஒருநாள் மனமயங்கித் தனது தெய்வயானையை மறந்து அதனோடுண்ணாமல் தான்மட்டும் அவாவோடு அடிசிலை உண்டொழிந்தான். (25)

 

தெய்வயானை மறைந்து போதல்

உதயணகுமரன் தெய்வயானை தன் கனவிற் றோன்றிக் கூறிய உறுதிமொழியினைக் கடந்து அதனையின்றியே உண்டமையால் தன்பாலிருந்த அந்த யானை மாயவித்தைபோல மறைந்து போய்விட்டதாக; உதயணன் அதனைக் காணாமையாற் பெரிதும் மனம்வருந்தி மணியை இழந்துவிட்ட நல்ல பாம்பு போலக் கையறவுற்றுத் துயரம் மிக்குத் தன் சேனையை ஏவி அதனைத் தேடிக்கொடு வம்மின்! என்று கட்டளையிட அச்சேனை நாடெங்கும் பரவிச் சென்று தேடுவதாயிற்று என்க. (26)

 

சிந்துநதி என்னும் பேரியாறும் கங்கைநதியென்னும் பேரியாறும் சேர்ந்து மிகவும் வளமுண்டாக்குதற்கிடனான அழகிய அவந்தி நாட்டின்கண், அதன் தலைநகராய்த் திங்கள் மண்டிலத்தைத் தம்முச்சியிலே சூடுமளவு உயர்ந்துள்ள மதிலரணையுடைய தாய் வேந்தன் வீற்றிருந்து காவற் சாகாடுகைக்கு மிடனாகத் திகழும் அரண்மனையையுடையது ‘உஞ்சைமா நகரம்’ என்னும் நகரம் என்க.(27)

 

பிரச்சோதன மன்னன்

அம்மாநகரத்தின்கண் அரசு கட்டிலிலேறியிருந்து, இத்துணையென்று அறுதியிட்டுரைக்க வொண்ணாத பெரும்படை களையுடைய பிரச்சோதனன் என்னும் பெயரையுடைய வெற்றி வேந்தன் இடம்பெறுதற்கு வந்து நிரல்பட்டு நிற்கும் பிறநாட்டு வேந்தர்கள் தனக்கு மிகவும் அடங்கித், திறைப்பொருள் கொணர்ந்து செலுத்தும்படி சிறப்புடன் ஆணைச் சக்கரமுருட்டி இந்நிலவுலகத்தை ஆட்சி செய்து முழங்கா நின்ற பெரிய பட்டத்தியானையோடு நிலை பெற்றிருப்பானாயினன் என்க. (28)

ஒப்பற்ற அப்பிரச்சோதன மன்னவன் பிறமன்னர் செலுத்துகின்ற பொன்னாகிய திறைப்பொருளின் கணக்குக் கேட்குங்காலத்தே ஓரரசன் பெயர்க்கு முன்னர்த் திறை செலுத்தாமைக்கு அறிகுறியாகப் புள்ளியிட்டிருந்தமையை அதுகாறும் அறிந்திலனாய்அப்பொழுதுணர்ந்து கணக்க மாந்தரை நோக்க, அவர் அருகில் வந்து அம்மன்னன் திறை செலுத்தாமையைக் கூறியவுடன் அம்முடிவேந்தன் பெரிதும் சினமெய்தினன; என்க. (29)

 

பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்

சினமுற்ற அச் செங்கோல் வேந்தன் அமைச்சரை நோக்கிநண்பரீர்! நந்திறத்திலே அச்சமின்றி இத்தகைய தீங்கியற்றத் துணிந்த அந்தத் திறைகடன்பட்ட மன்னன் செய்தியை யாமறிந்திடாதபடி நீயிர் இத்துணை நாளும் நன்றாக மறைத்துவைத்தமைக்குக் காரணந்தான் என்னையோ? என்று வினவினன். (30)

 

அமைச்சர் விடை

அதுகேட்ட நல்லமைச்சர் வணங்கி வேந்தர் பெரும! திறைக்கடன் செலுத்தாமல் விட்ட மன்னவனாகிய உதயணகுமரன் திறை செலுத்தாமைக்குரிய காரணங்களும் உள; அவை அம்மன்னன் போர் நிகழ்தற்குரிய களத்தினில் மறவரெல்லாம் கருதிப் பார்த்தற்கியன்ற பேராண்மையும், பெறுதற்குரிய பொருள் நிரம்புதற்குக் காரணமான பெருமையுடைய கல்விச் சிறப்பும், அஞ்சாமையையுடைய களிற்றினை அடக்கும் ஆற்றலும், குற்றமற்ற கோடவதியென்னும் யாழினாற் சிறப்பாக வாய்த்துள்ள வித்தையும் என்க. (31)

 தன்னாட்டினது வளப்பமிகுதியா லுண்டான நிலை பேறுடைய செல்வப் பெருக்கமும் இளமை நலனும் அழகிய அணி

கல மிகுதியும் உயர்குடிப் பிறப்பும் ஆம் இவற்றை உடையவனாதலாலே அவன் நந் திறைக்கடன் செலுத்தாதவனாயினன். எனவே அத்திறைக்கடன் தங்குவதாயிற்று என்று அளவையும் நீதியுமுடைய அவ்வமைச்சர்கள் கூறினர். (32)

 

பிரச்சோதனன் சினவுரை

அமைச்சர் கூறிய மாற்றம் கேட்டு அப் பிரச்சோதன மன்னவன் மிகவும் வெகுண்டு அவ்வமைச்சரை நோக்கி, “ஆயின் நீயிர் இன்னே சென்று அச்சிறுவனைச் சிறைப்படுத்தி எம்பாற் கொணர்வீராகஎன்று கட்டளையிட, அது கேட்ட இவ்வமைச்சர்கள் மதிமயங்கி வேறோர் உபாயம் செய்யலானார் என்க. (33)

 

அமைச்சர் சூழ்ச்சி

மானமிக்க வேற்படையினையுடைய அவ்வமைச்சர்கள், உதயணன் அமைச்சனாகிய யூகி என்பான் தன் பகைவர் மேல் போர் மேற்கொண்டு போன செய்தியையும் உதயண குமரன் தன் தேவயானை மறைந்து போனமையாலே வருந்தியிருப்பதும் (ஒற்றராலுணர்ந்து) இச் செவ்வியில் மாய யானை செய்து அதனை அவனுக்குக் காட்டி அவனைப் பிடித்துக் கொள்வதும் ஆகிய இவற்றை ஆராய்ந்து துணிந்து அவ்வழியே மனமொன்றி ஈடுபடலானார். (34)

அமைச்சர் மாயயானை செய்தல்

தாம் ஆராய்ந்து லுணிந்தபடியே அவ்வமைச்சர் தாமும் அரக்கினாலும், மெழுகூட்டிய நூலானும், மரத்தினாலும், துணியாலும், விலங்குகளின் மயிராலும், விரித்துலர்த்திய தோலினாலும், பின்னும் அதற்கு வேண்டிய பிறவற்றாலும் யானையின் உருவந்தாங்கிய பொய்யானை ஒன்றினை அத்தொழிலில் மிகவும் முயன்று செய்து முடித்தனர். (35)

 

 

அமைச்சர்கள் அந்த யானையைச் செலுத்துதல்

பொறிகளமைந்த அந்தப் பொய் யானையினது பருக்கும் வயிற்றினூடே தங்கும் மறவர் தொண்ணூற்றறுவரையும் அந்த யானையின் ஓருடம்பிலேயே பின்னும் அம்மறவருடைய போர்க் கருவிகளையும் மறைத்துவைத்து நீலமலையை இயக்குமாறு போல அந்த யானையை வழிகண்டு செலுத்தினர் என்க. (36)

 

சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்

பிரச்சோதன மன்னனுக்குற்ற அமைச்சர்களுள் ஒருவனான சாலங்காயன் என்பவன் அம்மாய யானையானது முகில் முழங்குவதுபோல முழக்கம் செய்யும்படி போர்த்திறமிகுந்த அந்த யானையைப் பொலிவுடைய அந்த மன்னன் முன்னிலையிலேயே அதனூடிருந்தே செலுத்திக் காட்டினன் என்க. (37)

 

சாலங்காயன் உதயணனைச் சிறைபிடிக்கச் செல்லல்

உலகத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சோதன மன்னன் சாலங்காயனுடைய அறிவாற்றலைக் கண்டு வியந்துசாலங்காயனே! நீயே அவ்வுதயணன்பாற் சென்று அவனைப் பிடித்துவருதி!” என்று பணிப்ப, அப்பணிபெற்ற அச் சாலங்காயனும் வேற்படையேந்தி நல்ல வேந்தர்களோடே வெண்குடையும் கோல் முதலிய படைகளும் பிச்சமும் தன்னுடன்கொண்டு விரைந்து சென்றான் என்க. பிச்சம் - ஒருவகைக் குடை. கோல் - முதலியன(38)

 

நாற்பெரும் படையின் அளவு

பதினாறாயிரம் என்னும் எண்ணினளவுள்ள யானைகளும் பதினாறாயிரம் ஒப்பற்ற குதிரைகளும் பதினாறாயிரம் கண்ணுக்கினிய மணியழுத்திய தேர்களும் பதினாறாயிரம் வில் மறவரும் என்க. (39)

இத்துணைப் பெரும்படைகளும் தத்தமக்குரிய அணிவகுப்பு முறையோடுகூடி மெல்ல மெல்ல வருவனவாக வென்று சாலங்காயன் கட்டளையிட்டுச் செலுத்த, அவற்றோடு பொருந்திய நல்ல பொறியாகிய உயரிய அந்தப் பொய்யானையும் வத்தவ நாட்டரசனாகிய உதயணன் தேவயானையைத் தேடித் திரிகின்ற காட்டினூடே வந்தது என்க. (40)

 

பொய்யானையை வேடர்கள் கண்டு உதயணனுக் கறிவித்தல்

அந்தக் காட்டின்கண் வாழ்கின்ற வேடர்கள் முகில் இடித்து முழங்கினாற்போன்று பிளிறுகின்ற அந்தக் களிற்று யானையையும், அக்காட்டிலுள்ள பிடியானைகள் அதனைக் காமுற்று அதன் கவுள் முதலிய உறுப்புக்களில் ஒழுகா நின்ற முல்லை மணங் கமழும் மதநீரையுண்ண மொய்க்கின்ற வண்டுகள் அகலும்படி தங்கையிற் பற்றிய தழையை வீசி அன்புடைமையாலே ஒச்சுதலையும் கண்டனர் என்க. அன்புடன் வீசலும் எனக் கூட்டுக. (41)

 

அவ்வேடர் இந்த யானையே எம்பெருமானுடைய தெய்வ யானைபோலும் என்று கருதித் தாமே விரைந்து சென்று உதயண குமரனுக்கு அந்த யானையின் வருகையை அறிவித்தலும் அம் மன்னனும் மகிழ்ச்சியுற்று அழகிய வளப்பமுடைய மணிமாலைகளால் ஒப்பனை செய்யப்பட்ட குதிரையின் மேலேறி விரைந்தனன் என்க.

(42)

 

 

 


உதயணன் மாய யானையைத் தேவயானை என்று கருதி
யாழ் மீட்டல்

பறவைகள் அவ்வுதயணனை யிடையிலே தடுக்கும் பொருட்டுத் தீ நிமித்தத்தாலே அந்த யானை பொய் என்று குறி செய்தலைக் கண்டுவைத்தும் வள்ளலாகிய அவ்வுதயண குமரன் மேலும் விரைந்து செல்வானாக; அது கண்ட வயந்தகன் அத் தீ நிமித்தங்காட்டி நீ செல்லற்க! என்று தடுப்பவும் நில்லானாய்ச் சென்று எதிரே தேன் பொழியும் மலர் நிரம்பியதொரு காட்டினூடே அழகிய அந்தப் பொய் யானையைக் கண்டு இது நம் தேவயானையே என்று தன் மனமொழி மெய்களாலே உண்மையை யுணர்ந்த பெரியோனாகிய அம் மன்னனும் மயங்கி மகிழ்வானாயினன் என்க. (43)

இவ்வாறு மகிழ்ந்த நம்பி அவ்வியானையைத் தொடர்ந்து வருகின்ற சிறந்த பிடியானைக் கூட்டத்தையும் விரும்பிப் பார்த்திலன் அந்த ஒரு நொடிப்பொழுதிலேயே நெஞ்சம் மகிழ்ந்து வீணையிற் சிறந்த வீணையாகிய தனது கோடவதியின் நரம்பினை யிறுக்கி அப்பொழுதே அந்த யானை மயங்குதற்குரிய தோரிசையிலேயே மிகவும் பண்ணிசைப் பானாயினன் என்க. கணம் - சிறந்த பிடிக்கணம். (44)

 

பொய்யானை உதயணன்பால் வருதல்

பொறியாகிய யானையினது மதநீர் பொங்குகின்ற செவியிலே அந்த யாழிசை புகுதலும் அந்த மாய யானை அவ்விசையிற் பொருந்திய மனமுடையது போலவே நடந்து உதயணன் முன் அணுகி வந்தவுடனே, அதன் உடலினுள் கரந்திருந்த போர் மறவர் அப்பொய்யானை யுருவத்தை அழித்து விட்டமையாலே அதன் பொறி கழன்று வீழ்ந்தது அவ்வளவிலே அந்தப் பொய்யானை ஒரு போர்மறவர் குழாமாகி விட்டது என்க. (45)

 

போர் நிகழ்ச்சி

அப்போர் மறவர் குழாத்தைக் கண்ட உதயண குமரன் இது நம் பகைவர் செய்ததொரு வியத்தகு செயலே என்றுண்மையுணர்ந்து போர் கிடைத்தமையாலே மகிழ்ந்து முறுவல் பூத்த முகத்தையுடையவனாக; அவ்வளவிலே அவனோடு சேர்ந்து வந்த வயந்தகனும் அவனைத் தொடர்ந்து வந்த குற்றமற்ற வீரமுடைய ஐந்நூறு போர்மறவர்களும் விரைந்து வந்து உதயணனுடன் கூடினர் என்க. (46)

அப்பொழுது அந்தப் பொய்யானையுருவத்துள் மறைந்திருந்து வெளிப்பட்ட படைஞர்களும் பரவி முன்பக்கத்தே சென்று உதயணனை வளைத்துக் கொண்டபின்னர் அவ்வத்தவ வேந்தனும் மனஊக்கமிக்குச் சினந்து தனது விற்படையாலே போர் செய்து நுறுக்கித் தள்ளினான். அப்பகைப்படை மறவர் தோற்று அப்போர்க்களத்திலேயே மாண்டு வீழ்ந்தனர் என்க. (47)

அந்தப் போர் மறவர் அழிவுற்றமை கண்டு சாலங்காயன் என்னும் அமைச்சனும் உதயணன் முன்பு வந்து சினவா நிற்ப, மேலும் தேரும் யானையும் குதிரையும் காலாளுமாகிய நாற்பெரும்படைகளும் அணுகி வந்து நான்கு திசைகளினும் உதயணன் மேன் மண்டி மிகவும் அணுகி வளைத்துக் கொண்டன; அதுகண்ட கூற்றுவனை ஒத்த வத்தவமன்னனுடைய கண்கள் சினத்தாற் பெரிதும் சிவந்தன வென்க. (48)

சினத்து மான் கூட்டத்துட் புகுந்த புலிபோன்று பகைமறவர் கூட்டத்துட் புகுந்து கொல்லும் தனது வாட்படையை வீசி மறலி அப்பகை மறவர் உயிரை விருந்தாகப் பருகும்படியும், தாம் கொணர்ந்த வில்லும் வாளும் பிறவுமாகிய படைக்கலன்களுடனே அப்பகைமறவர் அழிந்து வீழும்படி வலிய வாட்படையையுடைய அவ்வத்தவவேந்தன் போராற்றித் தனது வாட்படைக்கு இரைகொடுத்தனன் என்க. (49)

இவ்வண்ணம் உதயணகுமரன் பகைவரைக் கொன்று வீழ்த்திய அந்தப் போர்க்களத்தின்கண் குருதி ஆறுபோல ஒழுகவும், எஞ்சி நின்ற மறவர் அஞ்சிப் புறமிட்டோடவும் அது கண்ட சாலங்காயன் நெஞ்சு கன்றி உதயணன் முன்வந்து போர புரிய அப்பொழுது உதயணமன்னன் தனது வாளினை அந்தச் சாலங்காயன் தலையிலே வைத்தான் என்க. மன்+தன் வாள் எனக் கண்ணழித்துக் கொள்க. (50)

உதயணன் சாலங்காயனைக் கொல்லாது விடுதல்

சாலங்காயனைக் கொல்லற்குரிய செவ்விபெற்று அவன் தலையில் வாள்வைத்த செல்வனாகிய உதயணன் அரசர்கள் அமைச்சர்களைக் கொல்வதிலர் என்று அறிவுடையோர் நன்மொழியை நினைந்து சிவந்த தீயிலிட்டு வடித்த தனது வாளை அழுத்தாமல் அன்புடனே அந்த அமைச்சனை உயிரோடு விட்டனன் என்க. மந்திரீ, அந்தமைச்சன: விகாரம். தி - தீ; விகாரம். (51)

உதயணன் யானை குதிரை தேர்ப்படைகளை அழித்தல்

சாலங்காயனுக்கு உயிர்ப்பிச்சையளித்து விட்டவுடன் கூட்டமான யானைப் படைகள் ஒன்று சேர்ந்து வந்து உதயணகுமரனை வளைத்துக் கொள்ளவே அவ்வேந்தன் அவ்ற்றோடும் போர்புரிந்து அந்த யானைகள் மாண்டு விழவும் பின்னர்த் தேர்ப்படைகள் நிலத்திலே புரண்டு வீழவும், குதிரைப்படைகள் குருதி பொங்கி நிலத்திலே வீழவும் என்க. (52)

வெவ்விய சினமுடைய உதயணமன்னன் இவ்வாறாக வேறுவேறு படைவகுப்புக்களை அழித்து நூழிலாட்டுங் காலத்தே அவனுடைய கூர்வாள் ஒரு யானைக் கோட்டிற் பட்டு ஒடிந்ததாக; அதனால் படைக்கலன் இன்றி வறுங்கையனாய் நின்ற மாலையணிந்த அவ்வுதயணமன்னனை வெவ்விய சொற்களையுடைய பகைமறவர் பலர் அற்ற நோக்கிச் சினந்து சுற்றிக் கொண்டனர் என்க. மனன் - மன்னன். தஞ்சம் - உதவி. (53)

 

நூலாசிரியரின் இரங்கன் மொழிகள்

ஐயகோ! இந்தச் செவ்வியில் அப்பகைமறவர் பலர் நெருங்கிவந்து, சிறந்த மகளிருடைய கூந்தலிலே அன்றலர்ந்த புதிய மலர்களைச் சூட்டுகின்ற அருமைக் கைகளை - அம்மகளிர் நெற்றியிலே திங்கள் மண்டிலம் போலத்திலகமிடுகின்ற கைகளை - அம்மகளிருடைய பருத்த கொங்கைகளிலே குங்குமச் சாந்துபூசி மகிழுகின்ற இன்பக்கைகளை - அம்மகளிருடைய செந்தாமரை மலர்போன்ற திருவடிகட்குப் பாடகம் என்னும் அணிகலனை அணிந்து மகிழும் அன்புக்கைகளை; என்க. (54)

இன்னிசைக் கருவியாகிய யாழ்நரம்புகளையும் செவ்விய நறுமணச் சாந்தத்தையும் துழாவுகின்ற கைகளை, ஈதல் என்னும் அறத்தை மிகவும் விரும்பி இரவலர்கள் விரும்பியவற்றை யெல்லாம் அருளுடன் வழங்கும் வள்ளன்மையுடைய கைகளை, குற்றமற்ற குணங்களையுடைய ஒளிமுடி வேந்தனாகிய அவ்வுதயணமன்னனுடைய சிறந்த கைகளை மிகவும் வெள்ளிய துகில்கொண்டு புறத்தே கட்டினர் என்க. கெந்தம் - மணப்பொருள். எல்+முடி. (55)

உதயணன் ஓலையெழுதி வயந்தகன்பாற் சேர்த்தல்

சிலந்தியினது நூலாலே கட்டுண்டு நிற்குமொரு நல்ல அரிமானேறு போன்ற மாலையணிந்த வேலையுடைய அவ்வுதயணமன்னன் தன்பாற் பேரன்புடைய யூகிக்குமட்டுமே விளங்கும்படி குறிப்பு மொழிகளாலே ஒரு திருமந்திரவோலை வரைந்து அதனை யூகியின்பாற் கொடுக்கும்படி குறிப்பாற் கூறி வயந்தகனுடைய நன்மையுடைய கையிலே கொடுத்து விட்டனன் என்க. (56)

பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தை கனாக்காண்டல்

பிரச்சோதனன் அமைச்சனாகிய சாலங்காயனும் மறவரும் கட்டுண்ட உதயணனைக் குற்றமற்றவொரு தேரிலேற்றிப் பெரிதும் பாதுகாப்புடன் உஞ்சை நகர்க்குச் செல்வாராக! இனி அவ்வுஞ்சை நகரத்தின்கண் சொல்லொணாத சிறப்பினையுடைய அப்பிரச்சோதன மன்னவனுடைய பேரன்பிற்கெல்லாம் கொள்கலனாயமைந்த நன்மகளும் பொற்பாவைபோல்பவளுமாகிய வாசவதத்தை நல்லாள் துயிலிடையே தோன்றிய வளப்ப மிக்கதொரு கனவின்கண் என்க. (57)

ஒளிமிகுமிளமையுடையதொரு ஞாயிறு தன்னெதிர் வந்தது; அது கையிடத்தே தன் கொங்கைகளைத் தழுவிக் கொண்டு தன்னையும் அழைத்துக்கொண்டு அப்பொழுதே போகக் கனவு கண்டு அந்தவாசவதத்தை இவ்வினிய கனவினைத் தன் அன்புடைய தந்தைக்குக் கூற அவ்வரசனும் அப்பொழுதே அக்கனவினைக் கனா நூலறிந்த மேலோர்க்குச் சொல்லி அதன் பயன் யாதென வினவினன் என்க. (58)

கனா நூலறிந்தவர்பெருமானே! இவ்வாசவதத்தை இளமுலைப் போகந் துய்த்தற்கியைந்த ஆகூழையுடையா

னொரு பேரழகுடைய மணமகன் ஈண்டுவந்து துவளுமிடையையுடைய இவளுடைய இளமுலைப்போகமும் நுகர்ந்து தன்னுடன் அழைத்துச் செல்வான் என்று அக்கனவின் பயன்கூறக் கேட்டு அப்பிரச்சோதன மன்னனும் பெரிதுமகிழ்ந்திருக்கும் பொழுது முற்கூறப்பட்ட உதயணகுமரனும் தேரிலே உஞ்சை நகரத்திற்கு வந்து சேர்ந்தான். (59)

 

 

 

 

உதயணன் சிறைக் கோட்டம் புகுதலும்
வயந்தகன் யூகியைக் காண்டலும்

 

உதயணனைச் சிறையாகப் பற்றிக் கொணரக்கண்ட அம்மாநகரத்து மாந்தரெல்லாம் பிரச்சோதன மன்னன் பெரிதும் மதிகெட்டான் எனப் பழித்து உதயணன் பொருட்டு வருந்தா நிற்பவும், உதயணனது பழவினை வந்து அவனை வெவ்விய சிறைக் கோட்டத்துள்ளே புகுத்தாநிற்பவும் இவ்வாறு இருப்ப நல்லியல் அமைச்சனாகிய வயந்தகன் உதயணன் கூறியவாறு விரைந்து சென்று யூகியந்தணன்பால் உதயணன் திருமந்திர வோலையைக் கொடுத்தனன் என்க. (60)

ஓலைகண்டு யூகி துன்புறுதல்

உதயணகுமரன் வரைந்துவிடுத்த திருமந்திரவோலைச் செய்தி கேட்டவுடன் யூகியின் அரண்மனையில் எங்கெங்கும் அழுதலாலும் புலம்புதலாலும் கண்ணீர் அருவிபோல வீழ்ந்து மாந்தருடைய கால்களில் வழிந்து ஒழுகாநிற்பவும் அந்த யூகி பழம் புண்ணில் வேல் செருகினாற் போன்று வருந்திப் பொலிவிழந்து நிலத்திற் சாய்ந்தனன் என்க. (61)

யூகியின் கோட்பாடு

நிலத்திலே வீழ்ந்த யூகி ஒருவாறு தெளிந்து எழுந்திருந்து எம்மரசனைப் பொய்யானையைத் தேவயானைபோல மாறுபடக் காட்டிப் புல்லர்கள் சிறைப்பிடித்தனர். நன்று! நன்று! யாமோ எமக்குப் பெருமையுண்டாகும்படி அப்பகை மன்னனுடைய உஞ்சை நகரத்தை வாய்மையான யானையாலேயே அழித்துப் பின்னரும் அவ்வோலையிற் கூறப்பட்ட அப்பிரச்சோதன மன்னனுடைய மகளாகிய வாசவதத்தையையும் சிறைப்பிடிபிப்த்து எம்மரசனையும் மீட்கக் கடவேம் என்றும் என்க. (62)

எம்மரசன் மீண்டபின்னர் யாமும் மீளக்கடவேம் என்றும், சினந்து போர்க்களத்தினில் வாட்போரில் வஞ்சனை செய்து வென்ற அப்பகைவர்க்கு யாமும் வஞ்சனை செய்தே வெல்வோமென்றும் தன்னுட் கருதி நெடிய கண்களையுடைய தன் மனைவிமாரோடும் ஆங்கிருந்த சுற்றத்தார்களையெல்லாம் அவரவர் கொள்கைகளை மாற்றிப் புட்பக நகரத்திற்கு அழைத்து வந்து ஆங்கு இருப்பித்தான் என்க. (63 உருமண்ணுவாவினோடு இடபகனும் முறையே சயந்தி நகரத்தையும் செல்வம் நிறைந்த புட்பக நகரத்தையும் எய்தி இனிதாக ஆட்சி புரிந்திருப்பாராக! எம்பெருமான் சதானிக வேந்தனுடைய கணிகை மக்களோடு இளங்கோக்களாகிய பிங்கல கடகர்கள் கௌசாம்பியிலிருந்து நமதரசாட்சியினை நிலைநிறுத்தி ஆள்க என்றும் கூறி அன்புடனே அந்நகரங்களை அவர்க்கு வழங்கினன் என்க. உதயணன் ஆட்சி யூகியின் கண்ணதாகலின் அவன் வழங்க வேண்டிற்று. (64)

யூகியின் சூழ்ச்சி

யூகி நீள நினைந்து உதயண மன்னன் சிறைக்கோட் பட்டமைக்கு மனநொந்து இறந்தொழிந்தான் என்னுமொரு செய்தியைப் பலர் வாயிலாய்ப் பன்முறையும் கூறுவிக்குமாற்றால் முறையே யாண்டும் பரப்பி நாட்டின்கண் தன்னுடைய உருவத்தோடு ஒப்புமையுடையதொரு பிணத்தை ஊரறியக் கொடுபோய்ச் சுடுகாட்டில் ஈம நெருப்பிலிடுவித்தான். கான் - காடு; சுடுகாடு. (65)

யூகி பிறரறியாவண்ணம் அவந்தி நாடேகுதலும் பகைமன்னர்
நாட்டினைப் பற்றிக் கோடலும்

இங்ஙனமொரு சூழ்ச்சி செய்தபின்னர் யூகி தன்னகர மாந்தரும் யாண்டும் அழாநிற்பத் தன்னை யாருமறியாதபடி

மறைந்து போதலாலே பகையரசர்கள் அற்ற நோக்கி வந்து உயரிய வத்தவ நாட்டினைக் கைப்பற்றலாயினர், என்று மறைவிருந்த அந்த யூகி அறிந்து கொண்ட பின்னர், யாம் இனிச் சென்று சிறையிருக்கின்ற எம்மன்னன் உதயணகுமரனை அச்சிறையிடத்தே காண்பேம் என்று கருதி அந்த அவந்தி நாட்டை நோக்கிச் சென்றனன் என்க. (66)

ஊடுபோதற்கரிய காடுகளையும் முதிய மலைச்சாரல்களையும் சிவந்த நெற்கள் விளைதற்கிடனான வயல்களையும் மிக்க நீரையுடைய பேரியாறுகளையும் செல்வம் நிலைபெற்ற நாடுகளையுங் கடந்து போய் உதயணன் அமைச்சனாகிய யூகி பெரிய கொடிகள் நிறைந்து விளங்குகின்ற நல்ல நகரமாகிய உஞ்சையின்கண் புகுந்தான்; என்க. உஞ்சேனை -

உஞ்சை நகரத்தின்கண் யூகியின் செயன்முறைகள்
(
கலி விருத்தம்)

முழங்கா நின்ற கடல்போன்ற ஆரவாரத்தை யுடைய அந்த உஞ்சை நகரத்தின் புலிமுக மாடவாயிலின் அழகிய பக்கத்தே விளங்காநின்ற குடிமக்கள் நிறைந்த ஊர்மதிலில் வேற்றுருவில் மறைந்துறையும்படி வலிய தன்னுடைய படைமறவர்களை வைத்தனன; என்க. (68)

யூகி மாறுவேடம் புனைந்து நகர்வீதியில் வருதல்

இன்ன மொழிகளைக் கூறி வினவின் அவற்றிற்கு இன்னின்ன விடைதரல் வேண்டும் என்று தமக்குள் வரையறை செய்யப்பட்டுள்ள குறிப்பு மொழிகளைப் பண்டே உதயணன் நன்

கறிகுவனாதலின் பிறர் மயங்குதற்குக் காரணமான அக்குறிப்பு மொழிகளைப் பேசிக்கொண்டு நிலைபெற்றதொரு மாறுவேடம் பூண்டுகொண்டு உதயணனைக் காணும்பொருட்டு நல்ல அந்நகர வீதியினடுவே வந்தான் என்க. (69)

யூகியின் மாறுவேடத்தின் இயல்பு

இருள்போன்று கறுத்த தன் தலைமயிரை விரித்து விட்டு அதன்மேல் கண்டோர் மயங்குமாறு மலர்மாலை பலவற்றைப் பலவகையாகச் சுற்றிக்கொண்டு, அழகிய நிறமுடைய நறுமணப் பொடியை உடனிரம்பப் பூசியும் பொருளில் நன்மைமிக்க சுட்டியென்னும் அணிகலன் நெற்றியிற் பொருந்தும்படி வைத்தும், என்க. உரு - அழகு. (70)

இதுவுமது

நெற்றியி்ன்கண் செம்பொன்னாலியன்ற பட்டத்தையுமணிந்து அழகிய பொன்னிறச் சாந்தத்தை அணிந்த மார்பையுடையனாய், செம்பொன்னிழையாலியன்ற கச்சையைக் கட்டியவனாய் இடையின்கண் அழகாகக் கிழித்துடுத்த ஆடையையுடைய வனாய் என்க. (71)

இதுவுமது

மலர் மாலைகளானும் மேலாடையானும் ஒப்பனை செய்து கொண்டவனாய்ச் செவியிற் குண்டலமணிந்தவனாய்க் காலிற் சதங்கை கட்டியவனாய் வேய்ங்குழலிசைப்போனாய் உலர்ந்ததோல் போர்த்த உடுக்கையையுடையவனாய்த் தலையின்மேல் மிகுதியாகப் பொருந்திய நீர்க் குடத்தையுடையவனாய் என்க. போதம் அறிவுமாம். (72)

இவ்வண்ணமாக வேடம் புனைந்து கொண்டு கொடிகளாலே அழகு செய்யப்பட்ட பழைதாகிய அவ்வுஞ்சை நகரத்தின் அழகிய நல்ல தெருவின் நடுவே தோன்றி, தோன்றுகின்ற இசைக்கரண விலக்கணங்களையும் தன்னியல்பாலே கடந்து இடிபோல அத்துடியை முழக்கிக் கொண்டு இனிதாக வந்தனன் என்க. (73)

யூகி கூற்று

அங்ஙனம் வந்த யூகி ஆங்குக் குழுமிய மாந்தர் கேட்கும்படிமாந்தர்காள் கேளுங்கள்! வானவர் நாட்டிலிருந்து அவ்வானவர் கோமானாகிய இந்திரன் இந்நகரத்திற்கு வந்தனன்; யான் அவ்விந்திரன்பாற் கொண்டிருந்த அன்புடைமையாலே வான் வழியே இங்கு வந்தேன். அந்த இந்திரன் எனக்கு அரசனாவான; இங்குள்ள படைகளுக்கும் நுங்களுக்குங்கூட அவனே அரசன் ஆவன் காண்!” என்றான் என்க. (74)

மாந்தர்களே! நும்மனோர் தனக்குரிய புற்றில் வாளாவிருந்த புள்ளிகளையும் வரிகளையும் உடைய ஐந்து தலைகளையுடைய பற்றுதற் கரியதொரு நச்சுப் பாம்பினைப் பிடித்துவந்து இதுகாறும் இனிதே வாழ்ந்த இந்நகரத்திற் சிறைக்கோட்டத்தே வைத்தனர். அப்பாம்பினை இனிதாயதொரு காட்சியாக எவ்விடத்தும் எல்லோரும் அறியக் காட்டவுங் காட்டினர்; என்றான் என்க. (75)

 

இவ்வாறு யூகி கேட்போர் பொருளறியாது மயங்குதற் குரியனவும் ஒருவாறு குறிப்பாற் பொருள் விளங்குதற்குரியனவுமாகிய மொழிகள் எண்ணிறந்தவற்றைப் பலகாலும் சொல்லித் தன்னைச் சூழ்ந்து குழுமுகின்ற அந்த மாந்தர் தன்னைத் திறம்பட விடாது சூழ்ந்துவரும்படி பெரிய பெரிய தெருக்கள் எல்லாம் பிற்படக் கடந்துபோய் உதயணனிருந்த தப்புதற்கரிய சிறைக் கோட்டத்தின் பக்கலிலே சேர்ந்தான் என்க. (76)

(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
யூகி சூழ்வினையொன்றால் தன்வரவினை உதயணனுக்குணர்த்திப்
போதல்

சிறைக் கோட்டத்தயலே சென்ற யூகி தானும் உதயணனும் இளமையின் தம் சுற்றத்தாரிடையே பயின்றதும் கிளர்ச்சியுடைய யாழிற்கு மிகவும் பொருந்துவது மானதோரிசையின் விலங்கு பூட்டி வைத்தற்கிடனான அச்சிறைக் கோட்டத்துறை கின்ற

 

 

 மன்னனாகிய உதயணன் கேட்குமாற்றால் தான் பெரிதும் சுவைத்து மகிழ்கின்ற வேய்ங்குழலின்கண் வைத்து ஊதா நிற்ப; தன் நெஞ்சின்கண் ஊடுருவி மகிழ்விக்கின்ற அவ்விசையைக் கேட்குமளவிலே உதயணகுமரனும் இவ்விசை யூதுவோன் யூகியே என்று தெளிந்து மகிழ்ந்து தன் கவலையெல்லாம் விடுத்திருந்தனன். இவ்வாறு யூகி உதயணனுக்குத் தன் வரவினை உணர்த்திச் சென்றான் என்க. கிளைத்தலை - சுற்றத்தார் சூழல். (77)

பிரச்சோதனன் மறவர் யூகியை அணுகி ஆராய்ந்துபோதல்

இந்நிகழ்ச்சியினை ஒற்றராலுணர்ந்த பிரச்சோதனனுடைய படைமறவர் அவ்வியூகி பலவேறு கொடி நுடங்குகின்ற மாடவாயிலிடத்தே செல்லும்பொழுது வந்து அவனுடைய அழகிய வடிவத்தைக் கூர்ந்து நோக்காநிற்ப, அதுகண்ட யூகியும் (தன் சிறப்படையாளமாய்த்) தன் மார்பின்கண் பண்டு போர்க்களத்தே களிற்றியானைக் கோடுழுதமையாலுண்டான வடுவைக் குப்பாயத்தாலே (சட்டையாலே) மூடியிருப்ப எஞ்சிய பகுதிகளைத் தலைமுதல் அடியீறாக நன்றாக நோக்கிச் சென்றனர் என்க. யூகிக்கு மார்பில் வடுவுண்டென்பதனைவலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன், குஞ்சர மருப்பிற் குறியிடப்பட்டுச் செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து, மார்பினது வனப்பும்,” என (பெருங்கதை, 1, 25: 20-25) முதனூலும் கூறுதலறிக. (78)

யூகி யானைக்கு வெறியூட்டுதல்

யூகியைக் கூர்ந்து நோக்கிச் சென்ற மறவர் அரசனை அணுகி இங்ஙனம் வந்த புதுவோன் யாரோ ஒரு பித்தனாதல் வேண்டும், இன்றேற் பேயேறியவன் ஆதல் வேண்டும் என்று தம்மரசனுக்கு அறிவித்தனராக; அப்பால் யூகி தன் மறவர் உறையும் குடிமக்கள் மிக்க மதிற்பாக்கத்தை அடைந்து அற்றை நாளிரவிலேயே பிரச்சோதனன் பட்டத்து யானையைப் புகையூட்டி

வெறிகொள்ளச் செய்ய முனைந்தான் என்க. அனலும் கதம் எனினுமாம். (79)

இதுவுமது

பாக்கத்தை எய்திய யூகி தகுந்த செவ்வி இஃதென்றுட் கொண்டு வயந்தகனோடு கூடி ஆராய்ந்து துணிந்து தனது தோள்போன்றுதவு மியல்புடைய தோழனாகிய அவ்வயந்தகனும் தன்னோடு வர மயக்கமருந்திட்டுப் புகையூட்டுதற்கு வேண்டிய பொருள்களோடு வாட்படையையும் கையிலேந்திச் சென்று உபாயமாகக் கயிறொன்றினை வீசி அதனைப் பற்றிக் கொண்டு மதிலின்மேலேறி யானைக்கால் போன்ற மதிலுறுப்பாகிய கொம்மையின் மேலிறங்கித் தன்னாற்றலாலே அரண்மனையகத்துட்புக்கான் என்க. (80)

நளகிரியென்னும் அக்களிற்றியானையின் செயல்

85. அரண்மனையின்கண் அவ்வரசனுடைய பட்டத்தி யானை யாகிய நளகிரியினைப் பிணிக்கும் கொட்டிலைத் தேடிக் கண்டு அதனூடு சென்று அகிற்புகையோடு மருந்துப்புகையு மூட்டி அந்நளகிரியின் செவியிலேகளிற்றரசே! படைகள் மிக்க பிரச்சோதன மன்னனுடைய இந்நகரத்தைச் சிதைத்தழித்து நங்கோமகனைச் சிறைவீடு செய்தல் நினது தலையாய கடமைகாண்! அக்கோமகன் நுங்கள்பாற் பேரன்புடையனல்லனோ!” என்று செவியறிவுறுத்துப்பின்னரும் மானக்குணமிக்க நல்லோனாகிய அந்த யூகி அக்களிற்றினது செவியிலே மந்திரமோதியவளவிலே அம்மதக்களிறு தன்னைத் தறியோடு பிணித்திருந்த அறுத்தற்கரிய சங்கிலியை அறுத்துத் துகளாக்கியது என்க. (81)

யானை பாகரைக் கொல்லுதல்

யூகி களிறு காற்பிணியுதறினமை கண்டு யாம் இனி இவ்விடத்தினின்றும் நீங்குதற்குரிய செவ்வியிதுவே என்று கருதி நிலைத்த மதிலின்கண் ஏறிப் புறமே போக, அக்களிறு உலகெலாந் துயிலுகின்ற அவ்விருட்பொழுதிலே விரைந்து சுழன்று சுழன்று யாண்டும் ஓட, அதுகண்ட யானைவலவர் பக்கங்களிலே சென்று மறித்தலாலே அக்களிறு பின்னரும் வெகுண்டு முகிலிற்றோன்றும் இடிபோல முழங்கி அவர்தம் கருவியைப் பிடுங்கித் தன் கையால் அவர்களை அறைந்து கொன்றது என்க. (82)

பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயல் காண்டல்

நளகிரி வெறிகொண்டு மனம்போன வழி யாண்டும் ஓடுகின்ற செய்தியைக் கேள்வியுற்ற ஆழியையுடைய பிரச்சோதன மன்னன் இனிதே எழுந்து அக்களிற்றினது நல்ல வேட்டத் தொழிலைக் காண்டற்கு வெவ்விய முலைகளையுடைய மனைவிமாரொடு அழகுமிக்க மேனிலை மாடத்திலேறித் தன்னைச் சூழ்ந்து உரிமை மகளிர் நிற்ப அச்சமின்றி நோக்கினான் என்க. வேட்டம் - கொலைத் தொழில்.

(83)

நளகிரியின் தீச்செயல்கள்

அப்பொழுது அந்த யானை கூடங்களையும் மாட மாளிகைகளையும் இன்னோரன்ன பிறவற்றையுமெல்லாம் தனது மருப்பினாற் குத்திச் சிதைத்து மேலும் மாடங்களையும், மதிலையும், மீண்டும் அது இடித்து வீழ்த்திப் போகாநிற்ப, ஆண்டுள்ள மறவரெல்லாம் ஒருங்கு கூடி யானையின்பால் ஓடி, வேலும் குந்தமும் தண்டும் பிறவுமாகிய படைக்கலன்களை ஏந்தி அக்களிற்றின் கொடுஞ்செயலைக் கண்டஞ்சி வறிய கைகளைத் தட்டி நான்கு திசைகளிலுஞ் சூழ்ந்து நின்றனர் என்க. (84)

இதுவுமது

மக்களின் ஆரவாரங்கேட்டு அக்களிறு கூற்றுவனே உருவங்கொண்டு வந்தாற்போன்று ஓடிச் சென்று அம்மாந்தர்களிற் பலரைக் குத்தித்தன் கோட்டின்கண் அவர்கள் குடல் கிடந்தசையும் படி சூறைக் காற்றென ஆரவாரித்துத் தன் கண்ணிலே கண்ட கண்ட மாந்தரைக் கையாற் புடைத்து நாற்பத்தெண்மரைக் கொன்று அம்மக்கட் கூட்டத்தை ஊடறுத் தோடிப் பகைவரால் மாற்றுதற் கியலாத அவ்வரண்மனையினது மாடவாயிலின் மதிற்புறத்தே வந்தது என்க. (85)

மதிற்புறத்தே வந்த களிறு ஆண்டுள்ள அறுநூற்றைம்பது நல்ல சேரிகளையும் எழுநூற்று நான்கு பாடிகளையும் பிறவற்றையும் மதவெறி பிடித்த அந்தக் களிற்றியானை தன் கோட்டாலேயே குத்தி அழித்தொழித்தது என்க. (86)

உஞ்சை மாந்தர் அலமரல்

அப்பொழுது அம்மாநகரத்தே பண் பாடிய அழகிய மகளிரெல்லாம் பாடுதல் விடுத்து அழுதுகொண் டோடவும், கூத்தாடிய மகளிர்களும் கூத்தொழிந்து மனம் நொந்து போகவும், தம்முட் காதலாற் புணர்ச்சியுற்ற அழகிய மகளிரும் ஆடவரும் அப்புணர்ச்சி குலைந்தவராய்ச் சென்று செம்பொன்னாலியன்ற மேனிலை மாடங்களிலேறி ஆங்கு நிற்கின்ற பலரோடுங் கூடி நிற்பாராயினர் என்க. (87)

அமைச்சர் அக்களிற்றை யடக்குதல் உதயணன்
ஒருவனுக்கே முடியும் எனல்

மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பட்டுக் கலங்கிய பாற்கடல் போன்று நளகிரியாலே துன்புறுத்தப்பட்ட நகரமாந்தரனைவரும் வெற்றியுடைய தம் செங்கோன் மன்னனை யடைந்து குறை வேண்டினராக மன்னவனும் அமைச்சரோடு சூழ்ந்து வினவிய வழி அவர் இற்றை நாள் நமக்குத் தோன்றிய இவ்விடையூற்றை விலக்கி நம்மைப் பாதுகாத்தல் நன்மையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனுக்கே முடிவதாம், ஆதலால் நம் வாழ்க்கை அவன் பாலது என்று விளக்கிக் கூற அது கேட்ட மன்னவன் என்க. (88)

மன்னன் மறுத்துக் கூறுதல்

அதுகேட்ட மன்னன் பழிக்கஞ்சியவனாய் அமைச்சியலீர்! யாமோ அம்மன்னன் மகனோடு போர் செய்தற்கு ஆற்றலிலேமாய் வஞ்சித்துச் சிறைபிடித்துக் கொணர்ந்து அவனுடைய சீரையுஞ் சிறப்பையும் பறித்துக் கொண்டதொரு பழியும் கிடக்க, பின்னரும் பேரிடிபோலும் கொடுமையுடைய நளகிரிக் கூற்றத்தின் முன்புங் கொடு போய் விட்டால் அது பெரியதொரு பழியாகுமன்றோ என்று வெற்றி மாலையுடைய அப் பிரச்சோதன மன்னன் மறுத்துக் கூற அவ்வமைச்சர்கள் தந்தகுதிக்கியையக் கூறுவார் என்க. (89)

அமைச்சர்கள் அதுபழியன்று புகழேயாமெனல்

பெருமானே! இவ்வுதயணன் கையதாகிய கோடவதி என்னும் பேரியாழினது இன்னிசை கேட்பின் இந்திரனுடைய ஐராவதமேயாயினும் அடங்குவதன்றி மீறிச் செல்லாது. அவ்விந்திரன் களிறும் அவனை வழிபட்டு அவன்பின் ஏழடி செல்லுமே இங்ஙனமாகலின் தறிமுறித்த நமது களிற்றியானை இம்மன்னனுடைய யாழினது இசைக்கு அடங்குவதன்றிக் கடந்து போகாது; ஆகவே அது நமக்கும் அவனுக்கும் புகழேயன்றிப் பழியாகாது என்று ஆராய்ந்து அவ்வமைச்சர் கூறிய மொழி கேட்டு மன்னனும் அவ்வாறே செய்யத் துணிந்தனன் என்க. (90)

அமைச்சன் பிரச்சோதனன் சீவகன் என்பான்
உதயணனைக் கண்டு கூறல்

பிரச்சோதனன் வேண்டுகோளுடன் சென்ற சீவகன் என்பான் சிறைக்கோட்டம் புக்கு உதயணனுக்கு நன்கு கூறுவான். ?அரசர்க்கரசே இவ்வுஞ்சைமாநகர் மாந்தர்க்கு இற்றை நாள்

 

களிறு செய்யும் துன்பம் தீர்ப்பது உன் கடமையாமென்றும், இதற்குக் கைம்மாறாக நீ சிறை வீடுபெற்று நின்னாடு சேர்தலைச் செய்வது எம் மன்னன் கடமையாம் என்றும் எம் மன்னன் உரைத்தனன்? என்று அவ்வுதயணனைப் புகழ்ந்து கூறி அவனைச் சிறைவீடுஞ் செய்தனன் என்க. (91)

சிறைவீடுபெற்ற உதயணகுமரன் அந்நகர் மாந்தர் மகிழும்படி அழகிய சிவிகையிலேறி உயரிய பண்புடைய பிரச்சோதன மன்னன் அரண்மனை புகுந்து அழகிய மயிரின்கண் எண்ணெய் நீவித் திறம்பட நல்ல நீரிலே ஆடிச் சென்று பட்டாடையுடுத்து மணியணிகலன் காண்டற்கினிதாக அணிந்து கொண்டு அரச வீதியில் அழகுறச் சென்றனன் என்க. (92)

உதயணன் யாழிசைத்தலும் களிறு அடங்குதலும்

அங்ஙனம் சென்ற உதயணகுமரன் ஆங்கொரு பெரிய தெருவின் நடுவே அக்களிற்றியானை தன்னைப் பருந்துகள் பின் தொடர்ந்து பறப்பவும், பிற பறவைகளும் சூழ நிற்பவும் எதிர் வந்து தோன்ற, அதனைக் கண்ட பெருமையுடைய அவ்வத்தவ வேந்தனும் அழகும் வலிமையுமுடைய தன் பெரிய கையின்கண்ணதாகிய யாழினைப் பண்ணுறுத்திச் சீரோடு பண் எழுப்பிப் பாடியவுடனே ஆங்கு வந்த வலிமையுடைய அக்களிறு தானும் அவ்வின்னிசை கேட்டு மகிழ்ந்து அவன் திருமுன்னர் வந்து அடிகளில் முழந்தாட் படியிட்டு வணங்கிற்று என்க. (93)

உதயணகுமரன் நளகிரியின் மேலேறுதல்

பிரிந்து போன மைந்தர் மீண்டு வந்து தம்மைப் பெற்ற தந்தையின் அடிகளிலே மிக்க அன்புடன் வீழ்ந்து வணங்குவது போலத் தன்னைப் பணிந்த அந்த நளகிரியின் குறிப்பறிந்து அதன் மருப்பிலே அடியை வைத்து ஏறிப் பிடரின்கண் வீற்றிருந்து அந்தப் பெருந்தகையாகிய உதயணன் அதனையே ஏவி அதுதன் வளைந்த கையினாலேயே எடுத்துக் கொடுப்பத் தோட்டியையும் தன் கையிற் கொண்டனன் என்க. ஏறியிருந்து என மாறுக. (94)

உதயணன் அக்களிறூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்

பின்னர் அக்களிறு ஏவாமலும் ஆங்கு உதயணன் நிலத்திலே வைத்துள்ள நல்ல மணியையும் கோடவதியையும் புரோசைக் கயிற்றையும் தானே எடுத்துக் கொடுப்ப வெற்றிமிக்க நல்ல வேந்தனாகிய அவ்வுதயணன் அவற்றையுங் கைக்கொண்டு கயிற்றை அதன் கழுத்திலே வரிந்து மிகவும் இறுக்கிக் கட்டிப் பின்னர் அந்நகரிற் பொருந்திய சிறப்புடைய வீதிகளிலெல்லாம் சாரி வட்டம் என்னும் களிற்று நடை வகைகளாலே நன்றாக ஊர்ந்து வருதலை அப்பிரச்சோதன மன்னன் கண்டு பெரிதும் மகிழ்ச்சியுற்றான் என்க. சாரி, வட்டம் என்பன யானையின் நடை வகைகள். (95)

பிரச்சோதனன் உதயணனுக்குப் பரிசு வழங்குதல்

பொற்கம்பியாற் கட்டப்பெற்ற விலைமதிக்க வொண்ணா மிக்க வன்மையுடையதொரு முத்து மாலையை அந்நாட்டு முடிமன்னனாகிய பிரச்சோதனன் பரிசுப் பொருளாக உதயணனுக்கு வழங்க இடிபோன்று முழங்கும் அரிமானேறு போல வீறுடையனாகத் திகழ்ந்த அவ்வுதயணகுமரன் அம்முத்து மாலையை மகிழ்ந்தேற்று மார்பிலணிந்து கொண்டு அக்களிற்றினைக் கொடியுயர்த்திய அக் கோட்டையின் புலிமுக வாயில் மாடவழியாக உள்ளே ஊர்ந்து வந்தான் என்க. (96)

பிரச்சோதனன் உதயணனைத் தழுவிக் கோடல்

( - ள்.) அவ்வளவிலே பிரச்சோதன மன்னன் தன்கையை வீசிக் கோமகனே இனிக் களிறூர்தல் அமைவதாக வென்று கூற, மன்னன் கருதியாங்கு உதயணகுமரனும் தன் கால் விரல்களை அக்களிற்றின் நெற்றியிலே நன்கு அழுந்த ஊன்றி அக்களிறு இறங்குதற்குக் காலைமடித்துயர்த்திக் கொடுப்பக் கீழிறங்கினனாக; வேலேந்திய அழகுடைய அப்பிரச்சோதனன்றானும் மகிழ்ச்சியுடனே அவன்பால் வந்து அனைவரும் காணும்படி வியந்து, ஆர்வத்துடன் தழுவிக் கொண்டனன் என்க. (97)

பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன்கூறி உறவு கொள்ளல்

.) தழுவிக் கொண்ட பிரச்சோதனன் எம்மருமை மருமகன் நீயே காண்! என்று இன்மொழி கூறி அவ்வுதயணன் தன் கருத்திற்கிணங்கு முறையாலே அவனைப் பெரிதும் நயந்து உறவு கொண்டு அவனுடன் வீற்றிருந்த பொழுது ஒருநாள் மிக்க பேராற்றலுடைய அப்பிரச்சோதன மன்னன் உதயணனை நோக்கி அருமந்த திருமகள் போலும் மகள் வாசவதத்தை நல்லாள் கண்ட கனவினையும் கூறி இறைமகனே நீயே எம்மக்கட்கு வித்தை பயிற்றுவாயாக என்று வேண்டிக் கொள்ள அது கேட்ட உதயணனும் அம்

மக்கட்கு அரிய வித்தைகளை உணர்த்தலாயினான் என்க. பெருவலி, அன்மொழி.

 

உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்

பிரச்சோதனன் வேண்டுகோட்கிணங்கிச் செல்வ மிக்க வுதயணகுமரனும் அவனுடைய மைந்தர்களுக்கெல்லாம் வேல் முதலாய படைக்கலவித்தைகளை நன்கு பயிற்றியும் பூவேலை நிரம்பிய துகிலுடுத்த நுண்ணிடையும் மூங்கில் போன்ற மென்றோளும் வாய்ந்த ஒன்றனோடொன்று போரிடுகின்ற கயல் மீன் போன்ற கண்ணையுடைய வாசவதத்தைக்கு யாழ்வித்தை நன்குவரப் பயிற்றியும் அவர்களுடன் பெரிதும் உறவு பூண்டு நிகரற்ற இன்பத்தாலே மகிழ்ந்திருந்தான் என்க. (99)

மன்னன் மைந்தர் அரங்கேறுதல்

சொல்லொணாப் பெருமையுடையவனாகிய உதயணகுமரன் ஒருநாள் பிரச்சோதனனைக் கண்டுபெருமானே! நீ நின்மைந்தர் பயின்று முற்றிய வித்தையையெல்லாம் அரங்கேற்றிக் கண்டருள்க,” என்று கூறாநிற்ப அம்மன்னனும் அவ்வாறே மக்கள் அரங்கேற்றங்காண்பவன் அம்மக்கள் மலைபோன்ற யானையேறிஊர்ந்தும் குதிரையேறியும் தேரிலேறியும் முறைமையாகத் தங்கள் வித்தையின் சிறப்புக்களைக் காட்டிப் பின்னர் வாளும் வில்லும் பிறவுமாகிய படைக்கல வித்தைகளும் செய்து காட்டக் கண்டு மகிழ்ந்தனன் என்க. (100)

வாசவதத்தை யாழரங்கேறுதல்

பின்னர் வாசவதத்தை நல்லாள் வந்து தந்தையை வணங்க அவன் வாழ்த்துப்பெற்றுப் புகழ்ந்து நின்ற அவ்வாசவதத்தை இசைத்த யாழி னின்னிசையுங் கேட்டு உதயணனைச் சிறை செய்தமை குறித்து அப்பேரவையோர் இரங்கி மனந்தளர்ந்திருப்ப, அப்பிரச்சோதனன் பெரிதும் இன்பமுற்று! ! குற்றமற்ற யாழ்வித்தை முழுதும் எஞ்சாமல் இவ்வாசவதத்தை அறிந்து கொண்டாள்என்று பாராட்டி ஆசிரியனாகிய உதயணனை நோக்கி, “பெருந்தகாய! இப்பேருலகம் என்னை இகழ்ந்து பேசும்படி யான் உன்னை வலிய சிறையிலிட்ட எனது குற்றத்தைப் பெரிதும் நின்னெஞ்சத்தே எண்ணாது விட்டருள்கஎன்று வேண்டினன். (101)

வாசவதத்தை யாழிசையின் மாண்பு

அவ்வவையிலுள்ளோர் இசையின் வயப்பட்டுத் தம்மை மறப்பவும், வானத்திலியங்குகின்ற கந்தருவன் மைந்தர்

தாமும் அவ்விசை கேட்டு, வியந்து வந்து அவ்வவையினரோடிருந்து மகிழவும் பறவைகள் அவ்வின்னிசையான் மயங்கிப்பசும் பொன்னா லியன்ற அவ்வரங்கின்கண் வீழாநிற்பவும் இசையைக் குறுக்கியும் நீட்டியும் இசையிலக்கண முறைமையாலே பாடியபொழுது மதநீர் துளித்தலொழியாத களிற்றினையுடைய அப்பிரச்சோதன மன்னன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். மகளிரெல்லாம் அவ்வின்னிசையாலே பெரிதும் மயங்குவாராயினர் என்க. (102)

பிரச்சோதனன் உதயணனை வத்தவ நாட்டிற்குப் போக்கத் துணிதல்

இவ்வாறு பெரிதும் மகிழ்ந்த பிரச்சோதனன் எழுந்துவந்து உதயணன் கைகளைப் பற்றிக் கொண்டு இனியமுகமன் மொழிந்து அவ்வுதயணன் செலுத்தற்குரிய திறைப் பொருளைக் கணக்கோலையில் வரவு வைத்துக் கொண்டு அவ்வுதயணனை நோக்கிபெருந்தகாய்! இனி நீ நினது வத்தநாடெய்துதற்குப் புறப்படுதி!” என்று பணிப்ப, மறையுணர்ந்த அந்தணரும் உதயண மன்னனே நீ புறப்படுதற்குரிய நன்னாளும் நாளையே ஆகும் என்று கூறி நல்ல முழுத்தத்தையும் குறிப்பிட்டனர் என்க. (103)

பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்

108. ஓரிரண் டாயி ரங்க ளோடைதாழ் மத்த யானை
ஈரிரண் டாயி ரங்க ளெழின்மணிப் பொன்னின் றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயி ரம்மும்
வீரர்க ளிலக்கம் பேரும் வீறுநற் குமரற் கீந்தான்.

( - ள்.) பிரச்சோதன மன்னன் வீறுடைய உதயணகுமரனுக்குப் பரிசிலாக இரண்டாயிரம் பொன்முகபடாம் அணிந்த மத யானைகளும் நாலாயிரம் அழகிய மணிகளையுடைய தேர்களும் ஐயாயிரம் எண்ணளவுடைய ஒப்பற்ற போர்ப் பயிற்சியுடைய குதிரைகளும் நூறாயிரம் காலாண் மறவரும் வழங்கினான் என்க. (104)

யூகி குறத்தி வேடம் புனைந்து குறி சொல்லல்

இனி உதயணனைச் சிறை வீடு செய்யச் சூள் செய்து கொண்டு செவ்வி நோக்கியிருந்த யூகி வஞ்சத்தாற் சிறைப் பிடித்த பிரச்சோதனனுக்கும் வஞ்சனை செய்தே உதயணனை சிறை மீட்டல் வேண்டும் என்னுந் தன் சூள் தப்பாதபடி முயலத் துணிந்து அழகிய வொரு குறப்பெண் வேடம் புனைந்து கொண்டு அந்நகர வீதியிலே சென்று பலர்க்கும் குறிகள்

வகுத்துக் கூறுபவன் இந்நகரத்தார்க்கு மறலிபோன்ற நகரகிரியாலே இந் நகரம் சிதைந்த துன்பம் தீரும் பொருட்டு நல்ல திருநீர்ப் பொய்கையில் நீராடப் போகுமாறும் அங்ஙனம் நீராடாவிடின் மீண்டும் அக் களிற்றால் நகரம் சிதைவுறும் என்றும் அந் நகரத்தார்க்கு இனிதாகக் குறி கூறினான் என்க. (105)

பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல
யூகி நகரத்திற்றீயிடுதல்

யூகி கூறிய குறிகேட்ட அம்மாநகரத்து மாந்தர் பெரிதும் அஞ்சி அரசன்பாற் சென்று அறிவித்து அவனுடன் பாடு பெற்று அம் மன்னனோடு திரள்திரளாகக் கூடிப்போய் அந்நகர்ப்புறத்தேயுள்ள நீர் நிரம்பிய அத் திருநீர்ப் பொய்கையின்கண் நீராடா நிற்பச் செவ்விதேர்ந்து உதயண குமரனும் பத்திராவதி என்னுமொரு பிடியானையின் மீதேறி நிற்பச் செவ்வி இஃதே என்று கருதிய யூகிதானும் தன் மறவர்களைக் கொண்டும் மகளிரைக் கொண்டும் அவ்வுஞ்சை நகரத்திற் றீக்கொளுவினன் என்க. (106)

உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்

நகரத்தின்கட் பற்றி யெழுகின்ற நெருப்பினைக் கண்டு படைஞர்கள் அஞ்சிப் பிரச்சோதன மன்னனோடு சொல்லா நிற்ப அச் செவ்வி தெரிந்து வயந்தகன் உதயணன்பால் வந்து யூகியின் கருத்தினைக் கூற அவ்வத்தவ வேந்தனும் பிரச்சோதன மன்னன் வாசவதத்தையைப் பாதுகாக்க வேண்டித் தனது நல்ல பிடியானையி லேற்றிவிட அவள் தோழியாகிய காஞ்சனை என்பாளும் அப்பொழுது அப் பொய்கையை விட்டு வந்து அப்பிடியிலேறினள் என்க. (107)

இதுவுமது

காஞ்சனை யேறலும் ஆண்டு நின்ற வயந்தகனும் கோடவதியினைக் கைக் கொண்டு வலிய அந்தப் பிடியானை மிசை ஏறாநிற்பவவும், பின்னர் உதயணன் தனக்கு வெற்றியுண்டாக்குமாறு அந்தப் பிடியானையின் செவியில் மந்திரம் கூறவே அப்பிடிதானும் வியப்புற்று விரைந்து பஞ்சவனம் என்னுமிடத்தைத் தாண்டிச் செல்லும் பொழுது வழியினின்ற தொரு மூங்கிற் கிளை கோடவதி யிற் சிக்கி வீழ வயந்தகன் அதனை உதயணனுக்குக் கூற அவனும் பெருமை பொருந்திய பிடி நங்காய் நிற்பாயாக! என்று கூற வென்க. பஞ்சவனம் - ஐந்து காடுகளை எனினுமாம். (108)

 யானை நிற்றலும் வயந்தகன் நன்மை மிக்க புகழுடைய பெருமானே! யாழ் வீழ்ந்த இடத்தினின்றும் எண்ணூறு விற்கிடைத் தொலை நிலம் கடந்துவிட்டது என்று கூற, அது கேட்ட குலச் சிறப்பு மிக்க உதயண குமரன் பண்போடு முன்னர் அந்த யாழைத் தந்த தெய்வந்தானே நம் நலம் மிகும்படி இன்னுந் தருவதாம்; தெய்வத்தாலன்றி யாம் என் செய்யக் கடவேம் காண்! என்று கூறி, மீண்டும் ஊர்ந்து செல்ல அப்பிடியானை இளைப்புற்றது என்க. (109)

பிடி வீழ்ந்திறத்தல்

இளைப்புற்று நடுங்கிய யானையின் நிலைமை கண்டு உதயணன் முதலியோர் கையறவு கொண்ட நெஞ்சினையுடையவராகி அதன் மீதிருந்து இறங்கிய பின்பு அப்பிடியானை பெரிய நிலத்திலே வீழ அதன் தசைமிக்க கையினின்றுங் குருகி சொரிய அது கண்ட உதயணன் முதலியோர் அப்பிடியின் செவிமருங்கிற் சென்று ஐந்தெழுத்து மந்திரத்தைப் பன்முறையும் ஓத அப்பிடியும் இன்பமாகக் கேட்டு இறந்து தெய்வப் பிறப்பெய்திற்று 

உதயணன் முதலியோர் ஊர் நோக்கி நடந்து செல்லல்

பிடியானை இறந்த பின்னர் உதயணன் முதலியோர் தம்மூர் நிலத்தினருகே செல்லுதற் பொருட்டுப் பள்ளமான நிலத்திலே இறங்கி நடந்து செல்லுங்காலத்தே பாவை போல் வாளாகிய வாசவதத்தையின் அலத்தக மூட்டிய மெல்லடியில் சிவந்த கொப்புளங்கள் தோன்றுதலாலே தவளை வாய் போன்ற வாயையுடைய கிண்கிணிகள் பண்போடு ஒலித்தலின்றி நுடங்குமிடையையுடைய அச் செல்வி தன் பக்கலிலே வருகின்ற காஞ்சன மாலையின் தோளினைப் பற்றிக் கொண்டு சென்றாள் என்க. இறங்கிச் சென்று - இறங்கிச் செல்ல. (111)

வயந்தகன் அவர்களை வீட்டுப் புட்பகம் போதல்

வாசவதத்தையின் நடைவருத்தங் கண்டு உதயண மன்னன் மனங் கசிந்து பக்கத்திலே உயர்ந்துள்ள நாகணவாய்ப் புள்ளும் வண்டுகளும் இசை பாடுதற் கிடனானதொரு பூம் பொழிலினகத்தே மலர்ந்த பொய்கை யொன்றனைக் கண்டு அதன் கரையிலே இளைப்பாறி வாசவதத்தை முதலியோரோடு இருப்ப; அப்பொழுது வயந்தகன் உதயணனை வணங்கிப் பெருமானே யான் புட்பக நகர் சென்று விரைகின்ற குதிரை முதலிய நான்கு படைகளும்

கொண்டு வருவேன். அதுகாறும் பெருமான் இளைப்பாறுக! என, அது கேட்ட மன்னனும் அங்ஙனம் நீ ஊர்க்குச் செல்வது

நல்ல காரியமே என்று கூற வயந்தகனும் விரைந்து புட்பக நகர் நோக்கிச் சென்றான் என்க. (112)

வேடர்கள் உதயணனை வளைத்துக் கோடல்

ஞாயிற்றுமண்டிலம் மேற்றிசையிலே மேலைமலையின்கட் சென்று மறைவதனைக் கண்டு உதயணகுமரன் வாசவதத்தையை நோக்கிகோமகளே! நின்றோழி காஞ்சன மாலையோடு நன்றாகத் துயில்வாயாக!” என்று பணிப்ப அவ்வாறே அவர் துயிலுங்கால் மாவீரனாகிய அவ்வேந்தன் அற்றை இரவு முழுவதும் துயிலானாய் விழித்து அவர்களைப் பாதுகாத்திருப்ப; அப்பொழுது ஞாயிற்று மண்டிலம் குணதிசையிற் றோன்றும் விடியற் காலத்திலேயே வேடர் பலர் ஒருங்கு கூடி வந்து உதயணன் முதலியோரை வளைத்துக் கொண்டனர் என்க. (113)

உதயணனுடன் வேடர் போர்செய்தல்

விடியலிலே வந்து சூழ்ந்த அவ்வேடர்கள் உதயணன் மேல் அம்புகளை மழைபோல மிகவும் பொழிய அது கண்ட உதயணனும் ஆக்கமுடைய தன் வில்லை வளைத்து அம்புகளை ஏவி அவ்வேட ரம்பு தங்கள் உடம்பிற் படாதபடி விலக்கி மேலும் நல்ல தொரு பிறைவா யம்பினாலே வெவ்விய ஆற்றலுடைய அவ்வேடர் களுடைய விற்களும் நாண்களும் வெவ்விய அம்புகளும் நிலத்திலே அற்று வீழும்படி எய்தனன் என்க. (114)

வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும்,
வயந்தகன் வரவும்

வில் முதலியவற்றை இழந்த வேடர்கள் தங்கள் செயலறுதியினாலே உதயணன் முதலியோரிருந்த அக் காட்டிலே தீக் கொளுவக் கண்ட உதயணமன்னன் அவ்வேடர்களை நோக்கிஅன்பர்களே! நீங்களெல்லாம் இனிதே வாழும்படி உங்கட்கு நிரம்ப யான் பொருள் தருவேன் கண்டீர்!” என்று கூறி அந்த வுபாயத்தாலே அவர்களை வயப்படுத்தி யிருக்கும்பொழுது ஊர் சென்ற மெய் நண்பனாகிய வயந்தகன் அழகிய வகைவகையான இனிய அடிசிலும் கொண்டு தமக்கான நால் வேறு படையும் தன்னைச் சூழ்ந்து வருமாறு சிறப்புடனே இனிதாக அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான் என்க. உய்வகையுங்களுக்கினியில்லை என்றும் ஒரு பொருள் தோன்றுதலறிக. (115)

உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்

அன்பு மிகுதியாலே வயந்தகன் கொணர்ந்த உணவினையுண்டு அனைவரும் அற்றை நாள் அக் காட்டிலேயே தங்கியிருந்தனர். மறுநாள் உதயணகுமரன் ஓர் அழகிய களிற்றியானையில் ஏறிவரவும் மகளிரிற் சிறந்த வாசவதத்தை நல்லாள் அழகிய வெளித்தோற்ற மமைந்த தொரு சிவிகையிலேறி வரவும் தேர் யானை குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகளும் சூழ்ந்து வரவும் உதயண மன்னன் பண்பாடு மிக்க சயந்தி நகரம் புகுந்து ஆங்கு இனிதே உறைவானாயினன் என்க. (116)

முதலாவது உஞ்சைக் காண்டம் முற்றும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக