வெள்ளி, 15 மார்ச், 2024

கம்பராமாயணம் கோசல நாட்டில் மழை ஆற்று[ப்படலம்

 

கம்பராமாயணம்

ஆறு

கோசல நாட்டில் மழை

ஆற்று வெள்ளம் - உருவகம்

சரயு ஆறு

உடலில் உயிர் பாய்வது போலச் சரயு ஆறு பாய்ந்தது

கோசல நாட்டில் மழை

 

1

ஐம்பொறி அம்புகள் குற்றம் புரிவதில்லைமகளிரின் முலை அம்புகள் அறநெறிக்குப் புறம்பாகச் செல்வதில்லைஇப்படிப்பட்ட கோசல நாட்டில் பாயும் ஆற்றின் அழகினைச் சொல்லுவோம்

2

திருநீறு பூசிய சிவபெருமானின் நிறத்தில் இருந்த வெண்மேகங்கள் இங்குள்ள ஆறுகளை அழகுபடுத்திக்கொண்டு செல்லும்கடலில் மேயும்திருமகளை மார்பில் அணிந்த திருமால் நிறத்தில் மீளும்.  

3

மேகம் திரண்டு விரிந்து சென்றதுமேகம் படியும் மலை மேகத்துக்கு மாமன்வெயிலின் கொடுமையால் மலைமாமன் வெப்பம் அடைந்திருக்கிறான்அவனை நீராட்டிக் குளிர்விப்போம் என்று வருவது போல மேகங்கள் வந்தன.

4

புள்ளி வைத்துச் சொல்லக்கூடிய பெருமை உடையது பொன்மலை எனப்  போற்றப்படும் இமயமலைவானத்து வெள்ளி மீன்கள் தாரையாக ஒழுகுவது போலவும்வள்ளல்கள் தம்மிடம் இருப்பன எல்லாவற்றையும் வழங்குவது போலவும் மழையைக் கொட்டின

5

மானத்தையும் அறத்தையும் நோக்கி மனு அரசன் போல நீதி தவறாமல் ஆளும் மன்னனின் புகழ் போலவும்ஞானம் முற்றி நான்மறையில் கைதேர்ந்தவர் வழங்கும்  தானம் போலவும் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது

 

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,

தாசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும்நெறியின் புறம் செலாக்

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்:       1

 

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்

ஆறு அணிந்து சென்றுஆர்கலி மேய்ந்துஅகில்,

சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே.      2

 

பம்பி மேகம் பரந்தது, 'பானுவால்

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;

அம்பின் ஆற்றுதும்என்றுஅகன் குன்றின்மேல்,

இம்பர் வாரி எழுந்தது போன்றதே.        3

 

புள்ளி மால் வரை பொன் என நோக்கிவான்,

வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,

உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அவ்

வள்ளியோரின்வழங்கின - மேகமே.                4

 

மானம் நேர்ந்துஅறம் நோக்கிமனு நெறி

போன தண் குடை வேந்தன் புகழ் என,

ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்

தானம் என்னதழைத்தது-நீத்தமே.     5

 

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்

கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்

தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

 

ஆற்று வெள்ளம் - உருவகம் 

 

6

தலையையும்மார்பையும்கால்களையும் தழுவிநிலை கொள்ளாமல் ஒருவரிடம் உள்ள செல்வத்தையெல்லாம் கவர்ந்து செல்லும் விலைமாதர் போல வெள்ளம் மலை வளங்களைக் கவர்ந்துகொண்டு ஓடிற்று

7

மணிபொன்மயில் பீலிதந்தம்அகில்சந்தனம் இன்ன பலவற்றை உருட்டிக்கொண்டு ஓடுவதால் ஆறு வணிகர் போல் தோன்றியது

8

பூ,  பூந்தாதுதேன்பொன்துகள்யானையின் மதநீர் ஆகியவற்றை அடித்துக்கொண்டு ஓடி வருவதால் வெள்ளம் வானவில் போலக் காணப்பட்டது

9

மலைக் கற்கள்மரங்கள்இலைகள் முதலான அனைத்தையும் ஏந்திக்கொண்டு கவியும் வெள்ளம் கடலுக்கு அணை கட்டச் செல்வது போலத் தோன்றியது

10

ஈக்களும் வண்டுகளும் மொய்க்குமாறு ஊக்கம் கொண்டுஉள்ளே தெளிவு இல்லாமல்அலையோசை என்னும் ஏப்பம் விட்டுக்கொண்டுவருவதால்வெள்ளம் ஊற்றும் கள்ளை உண்பவன் போலக் காணப்பட்டது.

 

தலையும் ஆகமும் தாளும் தழீஇஅதன்

நிலை நிலாதுஇறை நின்றது போலவே,

மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,

விலையின் மாதரை ஒத்தது-அவ் வெள்ளமே.         6

 

மணியும்பொன்னும்மயில் தழைப் பீலியும்,

அணியும் ஆனை வெண்கோடும்அகிலும்தண்

இணை இல் ஆரமும்இன்ன கொண்டு ஏகலான்,

வணிக மாக்களை ஒத்தது-அவ் வாரியே.       7

 

பூ நிரைத்தும்மென் தாது பொருந்தியும்,

தேன் அளாவியும்செம் பொன் விராவியும்,

ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்,

வான வில்லை நிகர்த்தது-அவ் வாரியே.        8

 

மலை எடுத்துமரங்கள் பறித்துமாடு

இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,

அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய

நிலையுடைக் கவி நீத்தம்-அந் நீத்தமே.           9

 

ஈக்கள் வண்டொடு மொய்ப்பவரம்பு இகந்து

ஊக்கமே மிகுந்துஉள் தெளிவு இன்றியே,

தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்-

வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.           10

 

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்

கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்

தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்


சரயு ஆறு

 

11

யானைகுதிரைகளை இழுத்துக்கொண்டு வருவதால்அடித்துவரும் மணிகள் கொடிகள் போல் காணப்படுவதால்கடலோடு போராடச் செல்வது போல வெள்ளம் தோன்றியது.  

12

சூரிய குலத்தில் தோன்றிய எண்ணில்லாத பல அரசர்கள் போற்றும் புகழினைக் கொண்டதும்தாய் குழந்தைக்குப் பால் சுரக்கும் முலை போல் உலகுக்கு ஊட்டுவதுமான ஆறு சரயு.

13

மலை வாழ் மகளிர் கொடிச்சியர் இடித்த சுண்ணப்பொடிகுங்குமம்கோட்டுக்குழம்புஏலக்காய்சந்தனக்கட்டைத் துண்டுகள்சிந்தூரம்நரந்தம்நாகம்கடுக்கைஆர்  வேங்கை கோங்கு மரங்கள்பச்சிலைகண்டில்-வெண்ணெய்வரைத்தேன்,  அகில் - ஆகியவற்றால் வெள்ளம் மணம் வீசும்

14

எயிற்றியர் வயிற்றில் அடித்துக்கொள்ளுமாறு மலைமக்கள் எயினரின் அம்புகளைஅடித்துக்கொண்டு வந்ததுவில்அம்புகளையும் அடித்துக்கொண்டு வந்ததுஅதனால் அரசன் படையெடுத்துச் செல்வது போலக் காணப்பட்டது

15

தயிர்பால்வெண்ணெய்நெய் ஆகியவற்றை உரியில் வாரி உண்டான் கண்ணன்குருந்த மரத்தையும் மருத மரத்தையும் சாய்த்தான்ஆயர் மகளிரின் ஆடைகளை வாரிச் சென்றான்கண்ணன் போல வெள்ளம் அவற்றையெல்லாம் அடித்துச் சென்றது.  

 

பணை முகக் களி யானை பல் மாக்களோடு

அணி வகுத்தென ஈர்த்துஇரைத்து ஆர்த்தலின்,

மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,

புணரிமேல் பொரப் போவதும் போன்றதே.    11

 

இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்

பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,

சரயு என்பது-தாய் முலை அன்னதுஇவ்

உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.  12

 

கொடிச்சியர் இடித்த சுண்ணம்குங்குமம்கோட்டம்ஏலம்,

நடுக்குறு சந்தம்சிந்தூரத்தொடு நரந்தம்நாகம்,

கடுக்கைஆர்வேங்கைகோங்குபச்சிலைகண்டில் வெண்ணெய்,

அடுக்கலின் அளிந்த செந் தேன்அகிலொடு நாறும் அன்றே.       13

 

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,

வயின் வயின்எயிற்றி மாதர்வயிறு அலைத்து ஓடஓடி,

அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டுஅலைக்கும் நீரால்,

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே.         14

 

செறி நறுந் தயிரும்பாலும்வெண்ணெயும்சேந்த நெய்யும்,

உறியொடு வாரி உண்டுகுருந்தொடு மருதம் உந்தி,

மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,

பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15

 

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்

கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்

தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

உடலில் உயிர் பாய்வது போலச் சரயு ஆறு பாய்ந்தது

 

 

 

 

 

 

உடலில் உயிர் பாய்வது போலச் சரயு ஆறு பாய்ந்தது

 

 

16

போர் யானை பகைமன்னர் கதவை முரிக்கும்போராளுகளின் கைகளை வளைத்துப் பிடுங்கும்நெற்றியில் ஓடை அணி திகழ வரும்வண்டுகள் மொய்க்க வரும்கட்டுத்தறியை அறுத்துக்கொண்டு செல்லும்மத யானை இப்படியெல்லாம் செய்வது போல வெள்ளம் மருத நிலத்தைப் பாழாக்கியது

17

முல்லை நிலத்தைக் குறிஞ்சி நிலமாகவும்மருதத்தைக் முல்லை நிலமாகவும்நெய்தல் நிலத்தை மருத நிலமாகவும்அவற்றில் உள்ள பொருள்கள் எல்லாம் நிலை தடுமாறும்படி செய்துகொண்டு செய்வினை என்னும் விதி ஆட்டிப் படைப்பது போலசரயு ஆறு பாய்ந்தது.

18

உழவர்களின் வாய்க்கால்களில் ஆற்று வெள்ளம் பிரிந்து ஓடிற்றுகோத்திருந்த மக்கள் குலம் குலமாகப் பிரிந்தது போலப் பிரிந்தது.   

19

மலையில் தோன்றிஇடையில் பிரிந்துமுடிவில் கடலில் கலக்கும் வெள்ளம்  பலப்பல மறைகள் எல்லையில்லாப் பரம்பொருள் ஒன்றையே காண்பது போல ஒரே கடலில் கலந்தது

20

சோலைகாடுபொய்கைமணல்வனம்வயல் - எங்கும் ஆற்றுநீர் ஓடி உடம்பின் எல்லா இடங்கிலும் உயிர் உலாவுவது போலப் பரந்தது

 

 

கதவினை முட்டிமள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,

நுதல் அணி ஓடை பொங்கநுகர் வரி வண்டு கிண்ட,

ததை மணி சிந்த உந்திதறி இறத் தடக் கை சாய்த்து,

மத மழை யானை என்னமருதம் சென்று அடைந்தது அன்றே.                16

 

முல்லையைக் குறிஞ்சி ஆக்கிமருதத்தை முல்லை ஆக்கி,

புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,

எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,

செல்லுறு கதியில் செல்லும் வினை எனசென்றது அன்றே.      17

 

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்ககைபோய்ச்

சேர்த்த நீர்த் திவலைபொன்னும் முத்தமும் திரையின் வீசி,

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்துபார் கிழிய நீண்டு,

கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே.      18

 

கல்லிடைப் பிறந்துபோந்துகடலிடைக் கலந்த நீத்தம்,

'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈதுஎன்னத்

தொல்லையில் ஒன்றே ஆகிதுறைதொறும்பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல்பரந்தது அன்றே.      19

 

தாதுஉகு சோலைதோறும்சண்பகக் காடுதோறும்,

போது அவிழ் பொய்கைதோறும்புதுமணல்-தடங்கள்தோறும்,

மாதவி வேலிப் பூக வனம் தொறும்வயல்கள் தோறும்,

ஓதிய உடம்புதோறும் உயிர் எனஉலாயது அன்றே.          20

 

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்

கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்

தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

 

 

 

0000



பால காண்டம், ஆற்றுப் படலம் - பாடல்: 14

நீறு அணிந்த கடவுள் நிறுத்த வான் 

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் 

சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் 

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே

நோக்கம்

அயோதியில் எவ்வாறு மேகங்கள் தவறாது பொழிந்தன என்பதை எடுத்து கூறும் பாடல் 

பொருள்

நீறு அணிந்த கடவுள் நிறுத்த வான்

மேகங்கள் சிவபெருமான் பூசிய திருநீரை ஒற்றிய வெண்மை நிறத்தை கொண்டு நிற்கின்றன 

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து  -

அதே மேகங்கள் தம் சென்ற வழியெல்லாம் அழகு படுத்திக் கொண்டே சென்று கடல் நீரை குடிக்கின்றன

அகில் சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் -

 சந்தனக் குழம்பை தனது மார்பகங்களில் பூசி திகழ்கின்ற மகாலட்சுமி தாயார்

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே -

 அப்படிப்பட்ட மணம் திகழ்ந்த மகாலட்சுமி தாயார் என்னும் மங்கையை தனது மார்பினால் பெருமைக்குரிய அடையாளமாக அணிந்திருக்கும் திருமால் என்னும் பெருமாள் அவரது மேனியின் நிறம் கருப்புஅந்தக் கரிய திருமாலின் மேனி நிறத்தை போல மேகங்கள் கடல்நீரைக் குடித்து மீண்டும் நிலத்தற்கு திரும்பின

விளக்கம்:

 மேகங்களின் பயணங்களை எவ்வளவு அழகாக இந்த பாடலில் கூறியிருக்கிறார் பாடலின் ஆசிரியர் கம்பநாடர் பாருங்கள்! அறிவியலை தமிழ் பாடலில் கருத்தாக வைத்து கவிநயத்தையும் புகுத்தி அதை ஒரு சுவாரசியமான ஒரு தகவலாக கம்பன் தனது ராம காதை என்னும் இந்த நூலில் மிக எளிதாக மேகங்களின் செயல்பாடுகளை நமக்கு விளக்கி இருக்கிறார்.  இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம் மேகங்கள் நிலத்தின் மேல் பரப்பில் வானத்தில் உலாவும்போது அடர்த்தி இல்லாமல் வெள்ளை நிறத்திலும் கணம் இல்லாமலும் உலாவுகின்றன.  இந்த மேகங்களின் இயல்பு என்ன? அவைகள் கடலை நோக்கி பயணம் செய்யும் இயல்பைக் கொண்டவை. அப்படி பயணம் செய்யும் மேகங்கள் கடலின் மேல் வான் பரப்பில் உலாவும்போது சும்மா இருப்பது இல்லைகடலில் இருந்து நீரை ஆவி மூலமாக உறிஞ்சி தன்னுள் இந்த மேகங்கள் சேர்த்துக் கொள்கின்றன. இதன் மூலமாக இந்த மேகங்களின் எடை அதிகரிக்கின்றது. அது மட்டுமல்லாமல் இந்த மேகங்கள் இயல்பிலேயே வெள்ளை நிறத்தில் இருந்தாலும் கடல் நீரை ஆவியாக்கி உறிஞ்சி தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளதால் அவை கருமை நிறமாக மாறி விடுகின்றன.

 இந்த மேகங்களின் வெண்மை நிறம் சிவபெருமானின் திருநீறு அணிந்த மேனியை குறிக்கின்றது. அதே மேகங்கள் கடலுக்குச் சென்று அதன் வான்பரப்பில் அதன் நீரை உறிஞ்சி தன்னுள்ளே அடக்கி கருமை நிறம் அடையும் போது அந்த நிறத்தை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் என்னும் பெருமாளின் மேனி ஆன நிறம் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது என்று ஆசிரியர் நூலில் குறிப்பிடுகிறார்இதே மேகங்கள் கருமை நிறத்துடன் நிலப்பரப்பிற்கு வந்து மழையாக பொழிந்து வளத்தை கொழிக்க நீரை சொரிந்த பின்பு வெண்மை நிறம் அடைந்து விடுகின்றது. வெண்மை மேகங்கள் நிலப்பரப்பில் இருந்து நகர்ந்து சென்று கடலில் போய் கருமை நிறம் அடைந்து மீண்டும் நிலப்பரப்பிற்கு வந்து விழுந்து மீண்டும் வெண்மை நிறம் ஆகும் போது ஒரு சுழற்சி முடிகிறது

இந்த நிகழ்வை மேகங்களின் ஒரு ஆயுட்காலம் என்று கூறலாம் அப்படி ஒரு ஆயுள் காலம் முடிந்து வெண்மை நிறம் அடையும் போது அது சிவபெருமானின் வெண்மை நிறத்தை ஒத்த ஒரு தன்மையை அடைகின்றது.  சிவபெருமானோ மரணத்தில் கருணை பொழியும் கடவுள். மக்கள் மரணத்தில் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காகவே சிவபெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். மேகங்களும் மழை நீரை பொழிந்த பின்பு மரணத்தை தழுவுகின்றன. மரண கட்டத்தில் இருக்கும் மேகங்கள் தாங்கள் நற்கதி அடைய சிவபெருமானின் அருளை வேண்டுகின்றன. சிவபெருமானும் தன்னிடம் தஞ்சம் புகுந்த மேகங்களை அருள்பாலித்து அரவணைத்துக் கொள்கிறார் அதனால் அந்த மேகங்கள் சிவபெருமானின் திருநீறு அணிந்த உடம்பு எவ்வாறு வெண்மையாக இருக்கிறதோ அப்படி வெண்மையாக நிறம் மாறிவிட்டன.  பிறப்பு இறப்பு பிறகு மீண்டும் பிறப்பு என்னும் சுழற்சியின் படி தன்னுள் தஞ்சம் புகுந்த மேகங்கள் மீண்டும் பிறப்பு என்னும் அடுத்த கட்டத்திற்குப் போகும் பொருட்டு சிவபெருமான் அந்த மேகங்களை கடலுக்கு நகர பணிக்கிறார். அங்கே மேகங்கள் தனது உணவான கடல் நீரை நன்றாக உண்டு கொள்கின்றன கொழுக்கின்றன. இவ்வாறு மேகங்கள் செழுமையாக கடல் நீரின் வான்பரப்பில் இருப்பதை சந்தனத்தை தனது மார்பகங்களில் பூசிய மணமிக்க மகாலட்சுமி தாயார் எவ்வாறு செல்வ செழிப்புக்கு உண்டான தேவியாக இருக்கிறாரோ அதை வைத்து மேகங்களும் செழுமையாக இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.   கடலைத் தேடி சென்ற சில மேகங்கள் கடலை வந்து அடையாமல் பாதியிலேயே மடிந்து விடுகின்றன. அவ்வாறு இல்லாமல் கடலில் வெற்றிகரமாக வந்து அடைந்த மேகங்கள் கடலை தங்களது உணவாக உண்டு மடிந்து விடாமல் வாழ்கின்றன. இவ்வாறு கடலுக்கு வெற்றிகரமாக வந்த மேகங்கள் காக்கும் தொழிலை கொண்ட பெருமான் திருமாலின் அருளும் அரவணைப்பும் இருந்ததுனாலேயே கடல் வரை வந்து கடலை உணவாக உண்ண முடிந்தது. அவ்வாறு திருமால் தனது அருளால் இந்த மேகங்களை அனைத்து கொண்டதால் இந்த மேகங்கள் திருமாலின் கருமை நிறத்தை அடைந்தன.  திருமாலின் அரவணைப்பு கிடைக்கப் பெற்றதால் திருமாலின் திருமார்பில் உள்ள சந்தனம் பூசிய மணம் வீசும் திருமேனியை உடைய மகாலட்சுமி தாயாரும் தானாகவே இந்த மேகங்களுக்கு செல்வச் செழிப்பினை அருள் செய்கிறாள்

வாழும்போது இந்த மேகங்கள் திருமாலும் திருமாலின் திருமார்பில் சந்தனம் பூசிய மணம் வீசும் மகாலட்சுமி தாயாரும் அரவணைக்க அவர்களின் கருமை நிறத்தை தன்னுள் ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர்.  மக்களுக்கு செழிப்பான மழை நீர் வழங்குதல் என்னும் தங்கள் உலக கடமை முடிந்த பின்பு, மரணத்தில் நற்கதி வழங்கும் சிவபெருமானின் அரவணைப்பில் வந்து சிவபெருமானின் திருநீறணிந்த வெண் நிற மேனியை தங்களது நிறமாக ஏற்றுக்கொள்கின்றன.

 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக