வெள்ளி, 15 மார்ச், 2024

சூளாமணி

 

 

சூளாமணி

காப்பியங்களின் தலைப்புகளைக் கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். கதை மாந்தர்கள் அணிந்திருந்த அணிகள் தலைப்புகள் ஆகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரம் சிலம்பு என்னும் அணியின் பெயரைப் பெற்றிருக்கிறது. அதே போல மணிமேகலை (மணிமேகலை இடையில் அணிவது) இவ்வாறே சீவகனின் தாய் தன் மகனைச் சிந்தாமணி என அழைக்கிறாள். அதுவே அக் காப்பியத்தின் பெயராக அமைந்தது (சீவகசிந்தாமணி). அதுபோலவே, வணிகக் குடியினரின் ஆக்கத்தால் வளர்ந்த சமண சமயத்தில் அன்றைய சமுதாய நாகரிக வளர்ச்சியின் சின்னமாக விளங்கிய அணிகலன்களில் தலையில் அணியும் சூளாமணியை ஆசிரியர் தோலாமொழித் தேவர் தேர்ந்தெடுத்துக் காப்பியம் புனைந்துள்ளார்.

தொடக்கக் கால மனிதன் தன்னைவிட வலிமை வாய்ந்த சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளோடு, போரிட்டுத் தன் உடலாண்மையை வெளிப்படுத்தியதுபோல, இயற்கையோடு போரிட மனிதன் தன் ஆற்றலைவிட, மந்திர ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளைக் கொண்ட வடநாட்டுப் பழமரபுக் கதைகள் போல, சூளாமணியும் இயற்றப்பட்டுள்ளது.

சூளாமணி

சூளாமணி - தோலாமொழித் தேவர் இயற்றியது. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (கி.பி. 925-950). சமண சமயத்தைச் சார்ந்த நூல். காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்துச்சருக்கம். 59) என்று ஆசிரியர் பெருமைப்படுத்துகிறார்.

இதன்வழி சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராகவே இருக்கின்றது என்பது தெரிகிறது. இக்காப்பியத்தில், இரத்தின பல்லவ நகரினைச் சூளாமணியின் ஒளிர்ந்து (முத்திச்சருக்கம் 284) என நகரின் பெருமையையும், இந்திர சஞ்சய அரசனை, மஞ்சுசூழ் மலைக்கோர் சூளாமணி (முத்தி. 329) என அரசின் பெருமையையும், குன்றெடுத்த திவிட்டன் முடி மேல் சூளாமணி முளைத்த சோதி (முத்தி. 1519) எனக் காப்பியத் தலைவனின் பெருமையையும் சுட்டியிருப்பதால், இந்நூலாசிரியர் காப்பியத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளமை நன்கு புலனாகின்றது.

ஊழ்வினைக் கோட்பாடு

சூளாமணியின் ஆசிரியர் ஊழ்வினைக் கோட்பாட்டை விளக்கிக் கூறுகிறார். ஊழ்வினையை நீக்க இரத்தினத் திரயம் என்னும் கோட்பாடு, பல உலகம் பற்றிய உண்மை, குலம், சமய நம்பிக்கை ஆகியவற்றைச் சமண சமய உணர்வோடு எடுத்துரைப்பது இக்காப்பியத்தின் நோக்கமாக உள்ளது.

 

 

அரங்கேற்றம்

இக்காப்பியம், சேந்தன் எனும் மன்னன் அவையில் அரங்கேறியுள்ளது. இது பாயிரத்தின் மூலம் அறியும் செய்தி.

காப்பிய அமைப்பு

சூளாமணி காப்பியம் 12 சருக்கங்களில், 2131 விருத்தப்பாக்களால் எழுதப்பட்டுள்ளது.

ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, அரசியல் அறம், தூது நெறி, வேனில் விழா, அமைச்சரவை, சுயம்வரம், தெய்வப்போர், மாயப்போர் முதலியன கொண்டு இயன்ற வரை தமிழ் மரபுக்கேற்ப இக்காப்பியத்தை இயற்றியுள்ளார், ஆசிரியர்.

முதல் நூல்

சூளாமணிக்கு முதல் நூலானது செஞ் சொற் புராணம் என்பதைப் பாயிரத்தின் மூலம் உணரலாம். வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் வரும் 11-ஆம் தீர்த்தங்கரர் புராணத்தில் சூளாமணிக் கதை கூறப்படுகிறது. வடநாட்டு வேந்தர்களான விசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிட்டு எண்ணுதற்குரியர். ஸ்ரீபுராணத்தைத் தவிர, மற்றொரு சமணக் காப்பியமான மகாபுராணத்திலும் சூளாமணிக் கதைப் பொருள் வருகின்றது. நாற்பொருள் கூறுதல், ஆருகத (சமண) சமயத்தில் காணும் அரிய உண்மைகளை விளக்கல், வாழ்வில் பின்பற்றற்குரிய வரலாறுகளையும் நீதிகளையும் எடுத்துரைத்தல் ஆகியவை பற்றிப் பேசுவதால், சமணர்கள் மேலான நூலாக இதனைப் போற்றி வந்தனர்.

ஆசிரியர்

சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர் தான் என்பது பற்றித் தெளிவாக எதுவுமே தெரியவில்லை. தோலாமொழித் தேவர் எனும் பெயருக்கு வெல்லும் சொல்வல்லார் என்பது பொருள். தோலாமொழி என்று சில தனிச் செய்யுள்களில் இவர் பெயர் வருகிறது; ஆனாலும் இயற்பெயர் தெரியவரவில்லை. தேவர் என்ற ஒட்டே சமணர் என்ற குறிப்பைத் தருகிறது என்பதால், இவர் சமணர் என்பர் சிலர். வேறு மொழிகளில் இப்பெயர் கொண்ட காப்பியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமணர்கள் சீவக சிந்தாமணிக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றுவது சூளா மணியைத்தான்.

சிரவணபெலகோலாவில் காணும் கல்வெட்டில், காப்பியங்களுக்கெல்லாம் சூடாமணியாக விளங்கும் சூடாமணி, என்ற காவியத்தை இயற்றியவர் ஸ்ரீவர்த்த தேவர், என்று குறிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீவர்த்த தேவரே தோலாமொழித் தேவர் என்றும் குறிப்பிடுகிறார்கள் சிலர். தருமதீர்த்தன் என்பவரின் மாணவனாக இவர் இருந்திருக்கிறார் என்றும், சிலர் தொண்டை நாட்டுக்குரியவர் என்றும் சிலர் பாண்டிய நாட்டுக்குரியவர் என்றும் கருதுகின்றனர். சூளாமணியில் தோலா நாவில் சச்சுதன் என்றும் ஆர்க்கும் தோலாதாய் என்றும் வழங்கியமையால், சூளாமணி ஆசிரியர் அவர் இயற்றிய தொடரால் பெயரிடப்பெற்றார் எனக் கருதுவோரும் உளர்.

கதைச் சுருக்கம்

இந்தியாவில், சுரமை நாடு இருந்தது; இதன் தலைநகரம் போதனமாநகரம். பயாபதி என்பவன் இந்நகரை ஆண்டு வந்தான். இந்தப் பயாபதிக்கு மனைவியர் இருவர். மிகாபதி, மூத்தவள்; சசி என்பவள் இளைய மனைவி. இவ்விருவரும் முறையே விசயன், திவிட்டன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுக்கின்றனர். விசயன் சிவப்பாகவும் திவிட்டன் கறுப்பாகவும் இருப்பர். ஒரு நாள் பயாபதி கனவொன்று கண்டான். விடிந்ததும், நிமித்திகன் ஒருவன் வந்து, "நீங்கள் கனவு ஒன்று கண்டீர்கள் அல்லவா?" என்று கூறிக்கொண்டே அதன் பலன்களைக் கூறினான்; "வடநாட்டில், வெள்ளிமலையை அடுத்துள்ள வித்தியாதரர் நாட்டு மன்னன் சுவலனசடி; இவனது மனைவி, வாயுவேகை என்பவள். இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் இருவர்; மகன் அருக்ககீர்த்தி; மகள் சுயம்பிரபை. தன் மகளை இங்கு அழைத்து வந்து, திவிட்டனுக்குத் திருமணம் செய்து தருவான். இன்னும் ஏழு நாட்கள் போனதும், அம்மன்னனின் ஓலை வரும்!" என்று சொன்னான். சுவலனசடி மன்னன், ஒருநாள் தோட்டத்தில் இருந்த சமணக் கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டிருக்கும்போது, இரு சாரணர்கள் (வான்வழியே நடப்பவர்கள்) அத்தோட்டத்து வாசலில் சமணத் தத்துவத்தை எடுத்துரைத்தனர். அவற்றைக் கேட்ட சுயம்பிரபை, ஒரு நோன்பை மேற்கொண்டாள்.

சுயம்பிரபை மணம் குறித்து சதவிந்து எனும் நிமித்திகன் வீட்டிற்கே சென்று நாள் பார்த்தான் மன்னன். அந்த நிமித்திகன், 'திவிட்டனே சுயம்பிரபைக்கு ஏற்ற மணவாளன். இன்னும் ஒரு திங்களில், ஒரு சிங்கத்தின் வாயைப் பிளந்து தன் வீரத்தை அவன் உலகுக்கு உணர்த்துவான்' என்றான். இதைக் கேட்ட சுவலனசடி மன்னன், திவிட்டன் தந்தை பயாபதியிடம் மருசி என்ற தூதுவனை அனுப்பினான். ஓலையைப் படித்த பயாபதியும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான். பிறகு சுவலனசடி மன்னன், சிங்கத்தின் வாயைப் பிளக்கும் செய்கையை அறிய, ஒற்றர்களை அனுப்பி வைத்தான். வித்தியாதரர் வாழும் அதே பகுதியில், வடசேடி எனும் பகுதியை அச்சுவகண்டன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் மிகவும் கர்வமுள்ளவன்; கொடுங்கோலாட்சியை நடத்தி வருபவன். இவனிடம் சதவிந்து எனும் நிமித்திகன், "நீ இப்படிக் கர்வமுள்ளவனாக இராதே! உனக்கு ஒரு பகைவன் பிறந்து வளர்கின்றான்! அவன் எளிதானவன் அல்ல!” என்றான். உடனே, பயாபதியிடம் வரிவசூல் செய்து வரும்படி நான்கு தூதர்களை அனுப்பினான் அச்சுவகண்டன். திவிட்டன், திறை கொடுக்காமல், கண்டனை ஏசி, தூதர்களை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டான். தூதர்கள் சொன்னதைக் கேட்ட கண்டனின் அமைச்சனான அரிமஞ்சு என்பவன், அரிகேது எனும் மாயவித்தைக் காரனை அழைத்து, 'நீ சிங்க உருவம் கொண்டு, திவிட்டனையும் அந்த நாட்டையும் அழித்து வா!' என அனுப்பினான்.அந்தச் சிங்கம், அப்படியே சென்று சுரமை நாட்டில் பேரழிவு ஏற்படுத்தியது. திவிட்டன் அந்த மாயச் சிங்கத்தை விரட்டிப் பின் தொடர்ந்தான்; உண்மையான சிங்கம் இருக்கும் ஒரு குகை வரைக்கும் சென்ற அந்த மாயச்சிங்கம் பிறகு மறைந்துவிட்டது. திவிட்டன் குகையுள்ளே இருந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொன்றான். இந்தச் சம்பவங்களை ஒற்றர் மூலம் அறிந்த சுவலனசடி மன்னன், சுயம்பிரபையை மணத்துக்கு ஆயத்தப்படுத்தினான்.

நாற்படை சூழ, போதன நகரத்திற்குச் சென்றான், சுயம்பிரபை திவிட்டனைத் தன் விமானத்தில் இருந்தபடியே, கண்டு, காதல் கொண்டாள். மாதவசேனை என்பாள், சுயம்பிரபை உருவத்தை வரைந்து, அதைத் திவிட்டனிடம் காட்டினாள்; ஓவியத்தில் மயங்கிய திவிட்டன், சுயம்பிரபையை அடைய விரும்பினான். இவ்விருவர் மணமும் மறை விதிப்படி நடந்தது.

சில நாட்களுக்குப்பின், சுவலனசடி மன்னன் பிரபையைத் திவிட்டனுக்கு மணம் செய்வித்ததை அறிந்த அச்சுவகண்டன், சுவலனசடி மன்னன் மீது போருக்குப் புறப்பட்டான். பயாபதி முதலியோருடன் சேர்ந்து சுவலனசடி மன்னனும் போரிட முடிவு செய்தான். திவிட்டனுக்கும் வித்தியாதர வேந்தர்களோடு போரிடுவதற்குரிய மந்திரங்களைக் கற்பித்தான். இச்சமயத்தில் அச்சுவகண்டன் தூதுவன் வந்து, "அரசர்களே! கண்டனுக்குச் சுயம்பிரபையை வழங்குவீர்களா? அல்லது திவிட்டன் உயிரை அவனுக்குத் திறையாகத் தருவீர்களா?" என்று கேட்டான். இதைக் கேட்ட திவிட்டனின் கண்களில் பொறி பறந்தது! வானில், "திவிட்டனே வெற்றி பெறுவான்!” என்ற ஒலி கேட்டது. பயாபதி படையும், கண்டன் படையும் மோதின! போரில் கண்டனும், கண்டனின் தம்பியரும் மடிந்தனர். கண்டனின் மனைவி, போர்க்களத்தில், கண்டனின் உடல் மீது விழுந்து உயிர்விட்டாள்! பின்னர், திவிட்டன், கோடிக்குன்றம் எனும் மலையைக் கையால் அகழ்ந்து தூக்கினான்; அந்நேரத்தில், இவன் வாசுதேவனே என்று பலரும் வாழ்த்தினர்.

சில நாட்கள் ஆனபின்பு, சுயம்பிரபைக்கு, விசயன் என்றொரு மகன் பிறந்தான்; பிறகு சோதிமாலை என்றொரு மகளும் பிறந்தாள். சோதிமாலைக்குச் சுயம்வரம்; சோதிமாலை மண்டபத்தில் பலரையும் பார்த்தபின், தன் மாமன் அருக்க கீர்த்தியின் மகனான அமிர்தசேனனுக்கு மாலை சூட்டினாள். பிறகு அருக்ககீர்த்தி, தன் மகள் சுதாரை என்பவளுக்குச் சுயம்வரம் நடத்தினான். சுதாரை, திவிட்டன் மகன் விசயனுக்கு மாலை சூட்டினாள்; திருமணம் நடந்தது. ஒரு நாள், பயாபதி மன்னனுக்குச் சில சிந்தனைகள் தோன்றின. "முன்செய்த தவத்தால் தான் இந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்தது. ஆதலால், தவத்தை மறந்து நாம் இருத்தல் கூடாதல்லவா? இன்னும் தவம் செய்தால் வீடுபேறு கிட்டுமே" என நினைத்தான். தன்மக்களை அழைத்துப் பயாபதி, "அருள் இல்லாதார்க்கு அவ்வுலகு இல்லை. கல்வி இலார்க்கு நுண்ணறிவு இல்லை! பொருள் நிலை இல்லாதது! நல்லறங்கள் செய்யுங்கள்! உங்களுக்கு வயது ஆனதும், உங்கள் குழந்தைகளிடம் ஆட்சியை விட்டுவிட்டுத் தவம் செய்யுங்கள்"! என்று சொல்லியபின்பு தானும் மனைவியர் இருவருமாகத் தவம் செய்யப் புறப்பட்டனர். இறுதியில் பயாபதி முதலியோர் பேரின்பம் பெற்றனர். திவிட்டன் அருகன் அடியை மனத்திருத்திப் பல்லாண்டுக் காலம் ஆண்டான் எனக் காப்பியம் முடிகிறது.

கதை மாந்தர்

காப்பிய மாந்தர் என்ற நிலையில் மண்ணுலக அரசர்களையும் விண்ணுலக அரசர்களையும் அமைத்துள்ளார் ஆசிரியர். காப்பியத்தில் தலைமைப் பாத்திரம் திவிட்டனா? அல்லது பயாபதியா? என்பது தெளிவற்று இருப்பதை உணரலாம்.

 

தலைமை மாந்தர்

காப்பியத்தில் இன்பச் சுவை, யாரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறதோ, அவரே காப்பியத் தலைவர்! சூளாமணியில், திவிட்டனே காதல் சுவையைத் தாங்கி வரும் பாத்திரம்; அதுமட்டுமல்லாமல், வீரச்சாகசச் செயலையும் அவனே புரிகிறான். ஆனால், காப்பியம் வலியுறுத்தும் வீடுபேறு, பயாபதி மன்னனைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது!

சீவக சிந்தாமணியில், சீவகனே வீரன், காதலன், தவம் செய்பவன். அதனால் அக்காப்பியத்தில் சிக்கல் இல்லை.

ஆனால், சூளாமணியில் காதலனாகவும் வீரனாகவும் மட்டுமே திவிட்டன் உள்ளான். வீடுபேறு அடைவது பயாபதியைச் சார்ந்திருக்கின்றது. காப்பியம் இவ்வாறு முரண்பட்டு, தெளிவற்று, சுவைகள் முறிவுபட்டு இருப்பதால்தான், சூளாமணியைச் சிறுகாப்பியத்தில் சேர்த்தனர்! அளவில் பெரிதாக இருப்பினும், சிறுகாப்பியமாக இருக்கலாம் என்பதற்குச் சூளாமணி ஒரு சான்று.

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளும் பெற்றிருந்தாலும், தலைமைப் பாத்திரம் சிதைபடுவதால், சூளாமணி சிறுகாப்பியமானது. தமிழ்க் கதைமரபு, காப்பிய மரபு இவற்றின்படி, திவிட்டனே காப்பியத் தலைவனானான்.

பிற மாந்தர்

விண்ணுலக அரசர்கள், மண்ணுலக அரசர்கள் என உயர்நிலை மக்களைப் பற்றியே கவிதைகள் படைத்திருக்கிறார் ஆசிரியர். இக்காப்பியத்தில், பெண்கள் மிகவும் குறைவாக உள்ளனர் உணர்ச்சி மிக்க படைப்பாக அச்சுவகண்டனின் சொல்லும் செயலும் அமைக்கப்பட்டுள்ளன.

காப்பியச் சிறப்பு

ஆசிரியர் தமிழ் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு சிறந்த இலக்கிய வளத்தோடும் இக்காப்பியத்தைப் படைத்துள்ளார்.

இலக்கிய வளம்

தோலாமொழித்தேவர் பண்டைய தமிழ் இலக்கியங்களை நன்கு பயின்றவர் என்பதைத் தமது காப்பியத்தில் அவற்றைப் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டு அறியமுடிகின்றது. சீவகசிந்தாமணியிலே, மதிலைப் புனைந்துரைத்த பின்னர்ப் பரத்தையர்கள் வாழும் தெருக்களைக் கூறிக் கடைகளைப் புகழத் தொடங்குகிறார் திருத்தக்கதேவர். அதுபோலவே சூளாமணியிலும் மதிலைப் புனைந்துரைத்த பின்னும், கடைகளைப் புகழ்வதற்கு முன்னும், வரும் பாடல்கள் பரத்தையரையே குறிக்கின்றன. சூளாமணியின் முதல் 50 செய்யுட்களின் சொல், தொடர், கருத்து ஆகியவை சிந்தாமணிக் காப்பியத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன. திருக்குறளின் சொற்களைப் பல இடங்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

 

மானுடர் வாழ்வு

யானை விரட்ட அஞ்சி ஓடிய ஒரு மனிதன் ஆழ்கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் பாம்புகள் இருப்பதைக் கண்டான்; ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மதயானை, கீழே விஷநாகம்; இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும் சூழ்நிலையில் இருக்கும் அந்த மனிதன் மேலே அண்ணாந்து பார்க்கிறான். அவன் வாயில் ஒரு தேன்துளி விழுகிறது. மனிதன் யானையாலோ, அல்லது நாகத்தாலோ இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் அந்தத் தேன் துளியைச் சுவைத்து இன்புறும் தன்மையதுவே மானுடர் வாழ்வு. இதனை அறிந்து நடப்பாயாக! என்று உலக வாழ்வின் இயல்பைக் கூறுகின்றது இப்பாடல்.

ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி

நானவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ (1989)

(அரவு = பாம்பு; நாலும் = தொங்கும்; திறந்தது = தன்மையது)

மனிதப்பிறவி சிற்றின்பத்தை நாடுவது மிகமிக இழிந்தது என்பதைச் சுட்டும் வகையில் இக்கதையினை உவமை வாயிலாகத் தருவதை உணரமுடிகிறது.

 

கேள்வி பதில்கள்

1. சூளாமணிக் காப்பியத்தின் ஆசிரியர் யார்?

விடை : தோலாமொழித் தேவர்.

2. சூளாமணிக் காப்பியத்தின் தலைவன் யார்?

விடை : தமிழ்க் கதைமரபு, காப்பிய மரபு இவற்றின் படி, திவிட்டனே காப்பியத் தலைவனாவான். காப்பியத்தில் காதல் சுவையும், வீரச்சாகசச் செயலையும் புரிபவன் இவனே.

3. சூளாமணி என ஏன் பெயரமைந்தது?

விடை : காப்பியத் தலைமாந்தர் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்தி. 59) என ஆசிரியர் பெருமைப்படுத்தியுள்ளார். சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராக இருப்பதால், அதுவே காப்பியத் தலைப்பாக வந்தது.

4. துறவு பற்றிச் சூளாமணியின் கருத்து யாது?

விடை : உலக இன்பங்கள் அழியும் தன்மையன. அழியாநிலை அடையவழி எது என்று எண்ணச் செய்து, அருக மார்க்கத்தை முனிவர் வாயிலாக அறிந்து, துறவு பூணுவதே நன்னெறி என்கிறார் ஆசிரியர். துறவு மேற்கொள்ள உறுதியும், முனிவர் மொழித்துணையும் தேவை.

 

5. சூளாமணியில் வரும் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இரண்டினைக் கூறுக.

விடை : காப்பியத்தில் சிங்கத்தைக் கொல்லல், மலையை எடுத்து உயர்த்திப் பிடித்தல், மந்திர சக்தி பெறல் போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். கண்ணன் கோவர்த்தன கிரியை எடுத்தது போல, திவிட்டன் என்பவனும் கோடிக்குன்றம் எனும் மாமலையைக் கையால் அகழ்ந்து தூக்குபவனாகக் காட்டப்பட்டிருக்கிறான்.

6. துன்பத்திலும் இன்பத்தைச் சுவைக்கும் பாங்கினைச் சூளாமணி ஆசிரியர் எங்ஙனம் எடுத்துரைக்கிறார்?

விடை : யானை விரட்ட, அஞ்சி ஓடிய மனிதன் ஒருவன் ஆழமான கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் கொடிய பாம்புகள் இருப்பதைக் கண்டு ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மதயானை, கீழே விஷநாகம், இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும் அம்மனிதன் வாயில் ஒரு தேன் துளி விழுகின்றது. தான் இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் தன் வாயில் விழுந்த தேன் துளியைச் சுவைத்து இன்புறுகிறான் அவன். இக்கதை மூலம் துன்பத்துக்கு இடையிலும் இன்பம் தேடும் மனித முயற்சியை ஆசிரியர் விளக்குகிறார்.

7. இயற்கை வருணனை சூளாமணியில் எவ்வாறு அமைக்கப் பெற்றுள்ளது?

விடை : கயல், அன்னம், கிளி பற்றித் தனித்தனியாக வருணிக்கப் பட்டுள்ளது. விண்ணுலகம் பற்றியும், மாலை முதல் இரவு, வைகறைத் தோற்றம் வரையும், சிறுபொழுது கோலங்களை மிகவும் நுணுக்கமாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

8. காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமை அணி குறித்துச் சான்று தருக.

விடை : சூளாமணி ஆசிரியர், மணிகளை உயர்ந்த மக்களைக் குறிக்கவும் ஈயத்தை இழிந்த மக்களைக் குறிக்கவும், செவியில் உருக்கி வார்த்த செம்புத் துன்பமூட்டும் நிலையைக் குறிக்கவும் பயன்படுத்தியுள்ளார். அழகற்று விளங்கும் தாழைக்குப் பேயும், இழிநிலை மாந்தர்க்குக் கிருமியும் போன்ற உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

9. சூளாமணியின் சமயக் கொள்கை யாது?

விடை : சூளாமணி சமண சமயக் கொள்கையை உடையது. காப்பிய மாந்தர்கள் அருகதேவனை வணங்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டுள்ளன. அருகனை வணங்கினால் பிணி நீங்கும், பிறவி நீங்கும், விசும்பொடு வரம் கிட்டும், ஒளிவிரிந்து மகிழ்வர், மெய்ம்மறந்து உள்மகிழ்வர் எனும் பயன்களை உரைக்கிறது.

10. நன்னிமித்தம், தீநிமித்தம் பற்றிச் சூளாமணி குறிப்பிடுவது யாது?

விடை : முகில் முழங்குவதை நன்னிமித்தமாகக் காட்டுகிறது. (399) போர் செய்யப்புகும்போது நன்னிமித்தமாக வெல்பவனின் மேனி ஒளிவீசுவதும், அவன் சார்ந்த மகளிர்க்கு இடத்தோள் துடிப்பதும் காட்டப்பட்டுள்ளது (1218). தீநிமித்தமாக, காக்கை தேர்க் கொடிஞ்சியில் ஏறிக்கரைதல், திசையும் ஆகாயமும் தீப்பற்றி எரிதல் முதலியவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக